கனடிய தமிழரின் வாக்குகளை அபகரிக்க கனடா மேற்கொள்ளும் இந்த நாடகம் எங்களுக்கு புது விடயமல்ல என்கின்றது இலங்கை.
பொதுநலவாய அமைப்பிற்கு கனடா நிதி உதவியை நிறுத்தியமை தொடர்பில், அவ்வமைப்பின் பொது செயலாளர் கமலேஸ் சர்மா அதிருப்தி தெரிவித்துள்ளார். இதேநேரம், கனடாவின் இத்தீர்மானம் தொடர்பில், தாம் வியப்படையவில்லையென, இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பொதுநலவாய அமைப்பிற்கு தலைமை தாங்கும் நாடான இலங்கையின் மனித உரிமை நடவடிக்கைகளை அடிப்படையாக வைத்து, பொதுநலவாய அமைப்பிற்கு வழங்க வேண்டிய 20 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்காமல் இருப்பதற்கு, தீர்மானித்துள்ளதாக, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயாட் தெரிவித்துள்ளார்.
கனடாவின் இத்தீர்மானம் தொடர்பில் தான் அதிருப்தியடைந்துள்ளதாக, பொதுநலவாய அமைப்பின் பொது செயலாளர் கமலேஸ் சர்மா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் இத்தீர்மானம் தொடர்பில் மீண்டும் கவனத்திற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள பொது செயலாளர் கமலேஸ் சர்மா, திடீரென இவ்வாறு நிதி வழங்குவதை நிறுத்துவதன் மூலம், பொதுநலவாய அமைப்பின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடைப்படுமென, சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்கத்துவ நாடுகள் வழங்கும் இவ்வாறான நிதி மூலம் பொதுநலவாய அமைப்பின் பொது சேவைகள் மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதேவேளை கனடா அரசின் இத்தீர்மானம் தொடர்பில், இலங்கை வெளிவிவகார அமைச்சும், அறிக்கையொன்றை விடுத்துள்ளது. கனடாவின் இத்தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசு வியப்படையவில்லையென, அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா தனது அரசியல் நோக்கத்திற்காக தொடர்ந்தும் இலங்கை தொடர்பில் எதிர்ப்பு போக்கினை கடைபிடித்து வருகிறது. கனடா தொடர்ந்தும் தமது அரசியல் நோக்கங்களை அடைவதற்காகவே, நிதியை பயன்படுத்தி வந்துள்ளது. அதிகளவு நிதியை வழங்கி, அங்கத்துவ நாடுகளுக்கு மத்தியில் தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு கனடா முயன்று வந்துள்ளதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டை பகிஸ்கரித்ததன் மூலம், கனடா இலங்கைக்கு எதிரான தனது முதலாவது எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தது. கனடா இவ்வாறு பொதுநலவாய அமைப்பில் நடந்து கொள்ளும் முறையானது, இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு குந்தகமாகும். கனடா, பொதுநலவாய அமைப்பின் கொள்கைகளுக்கு முரணாக செயற்பட்டபோதிலும், இலங்கையானது அதன் கோட்பாடுகளுக்கு இணங்க, செயற்படுவதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுபோன்ற அழுத்தங்களை தடுப்பதற்காக, அமைப்பின் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் இணைந்து செயற்பட வேண்டுமெனவும், இலங்கை வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை பொதுநலவாய அமைப்பிற்கு கனடா நிதி வழங்க மறுத்தமையானது, மிகவும் மோசமான இராஜதந்திர நடவடிக்கையென, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பி.பி.சி. சந்தேசய நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது புலம்பெயர் தமிழர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில், தன்னிச்சையாக மேற்கொண்ட ஒரு நடவடிக்கை என்றும், அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இலங்கைக்கு அல்ல, கனடாவின் புகழுக்கே களங்கம் ஏற்படுமென, தெரிவித்துள்ள அவர், கனடாவின் சூழ்ச்சிகரமான பகிரங்கப்படுத்தப்படாத நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதியே இதுவெனவும், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தமது வாக்கு வங்கியை பாதுகாப்பதற்காக, கனடா இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.
கனடாவில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்கள் காரணமாக, இலங்கை பங்குபற்றிய இருபதுக்கு 20 உலகக் கிண்ண இறுதிப்போட்டி கூட அந்நாட்டில் ஒளிபரப்பப்படவில்லையென்பது, குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment