பிரித்தானிய தமிழர் பேரவையின் செயற்பாடு சிறுபிள்ளைத்தனமானதும் நகைப்புக்குரியதும் என்கின்றார் வணிகசூரியா..
இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என சுமார் ஆறாயிரம் பேரின் புகைப்படங்கள் மற்றும் பெயர் விபரங்களுடன் ஒர் பட்டியலை பிரித்தானிய தமிழர் பேரவை எனப்படுகின்ற அமைப்பு வெளியிட்டிருந்தது. இவ்வெளியீடு தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு பதிலளிக்கும்போதே இராணுவப் பேச்சாளர் றுவன் வணிகசூரிய மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில் : இலங்கைக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. 130 பக்கங்களை கொண்ட இவ்வறிக்கையில் யுத்த குற்றச்செயல்களை புரிந்ததாக, 6 ஆயிரம் இராணுவ வீரர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக நவநீதம்பிள்ளை மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில், இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களில் பலர், மனிதாபிமான நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாதவர்கள் என, தெரியவந்துள்ளது. அத்துடன் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இராணுவ வீரர்களின் பெயர்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளமை, தெரியவந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும், சாதாரணமாக சமூக பொது தேவைகளுக்காக, இராணுவத்தினரின் தகவல்கள், தேவைக்கேற்ப பெற்றுக்கொடுக்கப்படும். குறிப்பாக இராணுவம் கடற்படை மற்றும் ஏனைய படையணிகளை சேர்ந்த உறுப்பினர்களின் தகவல்களும், இவ்வாறு பெற்றுக்கொடுக்கப்படும். இராணுவத்தை எடுத்துக்கொண்டால், அதன் கீழ் வருகின்ற ரெஜிமென்ட் படையணிகள், பாதுகாப்பு சேவை பிரிவுகள், கொத்தலாவல பாதுகாப்பு கற்கை நெறி கல்லூரி போன்ற நிறுவனங்களை சேர்ந்த உறுப்பினர்களின விபரங்களும், பெற்றுக்கொடுக்கக்கூடிய வாய்ப்பு உண்டு.
அதேவேளை, முப்படையினரின் தகவல்களை கொண்ட இணையதளங்கள், நூற்றுக்கு அதிகமாக இப்போது காணப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில் இந்த இணையதளங்களில் இராணுவ உத்தியோகத்தர்களின் புகைப்படம், பெயர் விபரங்களும் காணப்படுகின்றன. தொலைபேசி இலக்கங்களும் அங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. இத்துடன் , நட்பு ரீதியாக தகவல்களை பரிமாறிக்கொள்ளும் நோக்கில், அதற்கு தேவையான விபரங்களும் காணப்படுகின்றன.
எனவே, இவை இரகசிய தகவல்களாக கருதப்பட வேண்டிய அவசியமில்லை. இவையெல்லாம் பொதுப்பாவனைக்கான தகவல்களாக அமைந்துள்ளன. பிரித்தானிய தமிழ் ஒன்றியம் என்ற புலம்பெயர் அமைப்பு எமது இராணுவத்தின் தகவல்களை கொண்ட இணையதளங்களில் இருந்து புகைப்படம் மற்றும் ஏனைய விபரங்களை எடுத்து, ஒரு அறிக்கையை தயாரித்துள்ளது. இது, ஒரு கேலிக்குரிய விடயமாகும். சிறுபிள்ளைத்தனமான ஒரு செயலாகவும் காணப்படுகிறது
0 comments :
Post a Comment