வீட்டிலுள்ள கிளிகளும் இப்போது பறந்துசெல்வதற்குக் காரணம் அரசாங்கத்தின் காலக்கெடு முடிவடைந்துள்ளதனால்தான் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
“இன்று தோல்வி என்ற சொல்லை அரசாங்கத்திற்கு சீரணிக்க முடியாதுள்ளது. தோல்வி என்ற சொல்லைக் கேட்கும்போதுகூட அரசாங்கத்திலுள்ள பெரிசுகளின் உடம்பெல்லாம் ஆட்டம் காண்கிறது, வியர்வை வழிகின்றது, ஞானோபதேசங்கள் நினைவுக்கு வருகின்றன.
மேல் மற்றும் தென் மாகாணத் தேர்தலின் உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர் ஆளும் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர் நிமல் ஸ்ரீபால த சில்வா. இந்த உண்மையை விளங்கிக் கொள்ளவியலாத அமைச்சர் டிலான், அமைச்சர் நிமல் ஸ்ரீபால த சில்வாவுக்கு கண்களில் குறை இருப்பதாகத் தெரிவிக்கிறார். ஊவா மாகாண சபைத் தேர்தலிலும் மக்கள் அரசாங்கத்திற்கு சிவப்புக் கொடி காட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. நாடெங்கிலும் மாகாண சபைத் தேர்தலை வைத்திருந்தால் அரசாங்கம் எப்பாடு பட்டிருக்கும் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அரசாங்கத்தின் ஆட்டத்திற்கு முடிவு கிட்டியுள்ளது. ஜெனீவாவில் தோல்வியைத் தழுவியது, மின்சாரக் கதிரை தோற்றது, தேர்தலிலும் தோற்றது.
சுருங்கச் சொல்வதாயின், கெட்ட காலம் நெருங்கினால் வீட்டிலுள்ள கிளிகளும் பறந்துவிடும். ஏன்தெரியுமா? வரவுள்ள ஆபத்துக்களைப் பற்றி முதலில் அறிந்துகொள்வன பறவைகளும், விலங்குகளுமே” எனவும் பா.உ. ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
No comments:
Post a Comment