அங்குலான பகுதியில் இரு இளைஞர்களைக் கடத்திச் சென்று கொலை செய்தமைக்காக அங்குலான பொலிஸின் முன்னாள் பொறுப்பதிகாரி உட்பட மேலும் நால்வருக்கு மேல் நீதிமன்ற நீதியரசர்கள் மூவரால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதி மன்றம் நேற்று உறுதிப்படுத்தியது.
மேல் நீதிமன்றத்தால் குற்றம் சுமத்தப்பட்டு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரித்த ஐவர் அடங்கிய உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குழுவின் ஏகமனதான தீர்ப்பை நீதியரசர் ஷிரானி திலகவர்த்தன வெளியிட்டார். சந்திரா ஏக்கநாயக்க, சத்ய ஹெட்டி கே. பிரியசத் டெப், ஈவா வனசுந்தர ஆகியோரே ஏனைய நீதியரசர்கள் ஆவர்.
71 பக்கங்கள் கொண்ட இத்தீர்ப்பின் மூலம் மனுதாரர்களின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டது. மரண தண்டனைக்கு மேலதிகமாக விதிக்கப்பட்ட தலா 40 வருடங்களுடன் கூடிய கடூழியச் சிறைத் தண்டனையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் கொன்ஸ்டபிள் இந்திரவன்ச, குமாரசிறி, பொறுப்பதிகாரி, ரீ. ரீ. நியூட்டன், கொன்ஸ்டபிள் ஜயரத்தின தம்மிக்க நிஹால், ஊர்காவற்படையைச் சேர்ந்த ஜனப்பிரிய சேனாரத்ன ஆகியோரே குற்றவாளிகளாவர். அரச சட்டத்தரணி சமிந்த அதுகோரல உடன் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய சட்டமா அதிபர் சார்பில் ஆஜரானார்.
ஜனாதிபதி சட்டத்தரணிகளான டீ. பீ. குமாரசிறி, அணில் சில்வா, சட்டத்தரணி ஸாலிய பீரிஸ் ஆகியோர் குற்றவாளிகள் சார்பில் ஆஜராகினர். தீர்ப்பு வெளியிட்ட வேளை, நீதிமன்றத்துக்குக் குற்றவாளிகள் கொண்டு வரப்பட்டிருக்கவில்லை. நீதிமன்ற பதிவாளர் அறிவித்த பின்னர் அவர்கள் கொண்டுவரப்பட்டனர்.
No comments:
Post a Comment