Wednesday, April 2, 2014

மலேசிய அரசின் நாடகம்! மாயமான விமானத்தின் விமானி கடைசியாக பேசிய வார்த்தையில் திடீர் திருத்தம் செய்தது ஏன்?

கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நகருக்கு 239 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மாதம் 8 ஆம் தேதி திடீரென காணாமல் போனது. விமானம் கடத்தப்பட்டதா, பைலட்களே தற்கொலை எண்ணத்துடன் விமானத்தை கடலில் மூழ்கடித்தனரா என மர்மம் நீடிக்கிறது.

சுமார் 14 நாடுகள் தெற்கு சீன கடல், தெற்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் கப்பல், விமானம், சாட்டிலைட் மூலமாக சல்லடை போட்டு தேடியும் மாயமான விமானம் பற்றிய தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இறுதியில், ஆஸ்திரேலியா அருகே கடலில் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என மலேசியா தெரிவித்தது. இதற்கு சீன பயணிகளின் உறவினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விமான விபத்து குறித்த முழுமையான விபரங்களை மலேசியா தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாயமான விமானம் குறித்த விசாரணையில் மலேசியா முறையாக கவனம் செலுத்தவில்லை என்று சீனா குற்றம் சாட்டி வருகிறது. தற்போது, அதை மெய்ப்பிக்கும் வகையில் மாயமான விமானத்தில் இருந்து இறுதியாக பைலட்டுகள் பேசிய வார்த்தைகளில் சில திருத்தங்களை மலேசிய அரசு வெளியிட்டுள்ளது. இது பல்வேறு தரப்பிலும் மலேசிய அரசு மீது சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

விமானம் மாயமாவதற்கு முன்பு தகவல் தொடர்பு கருவிகள் திட்டமிட்டு அணைக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டது. அதற்கு முன்பு விமானத்தில் இருந்த 2 பைலட்களில் ஒருவர் தரை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, 'ஆல் ரைட் குட் நைட்' என்று கூறியதாக முன்பு மலேசிய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், மலேசிய போக்குவரத்து துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்ட்ரோல் ரூம் அதிகாரிகளுடன் மார்ச் 8 ஆம் தேதி "குட் நைட் மலேசியன் 370" என்று பைலட் பேசினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், உண்மைகளை மலேசிய அரசு மறைக்கிறது, ஏதோ விபரீதம் நடந்துள்ளது. அதை மலேசிய அரசு மூடி மறைக்கிறது. உண்மை என்ன என்பதை வெளி உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று சீன அரசு வலியுறுத்தியுள்ளது. தற்போது இந்த விவகாரம் உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com