Wednesday, April 30, 2014

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க முகப்பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்துக - இலங்கையர்களுக்கு வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக, மத்திய கிழக்கில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களுக்கு, முகப்பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்துமாறு, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் காரணமாக, அந்நாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்கள், அவதானத்துடன் இருக்குமாறு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸின் பாதிப்புகள் தொடர்பாக அறிந்தவுடனேயே, குறித்த நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு, பாதுகாப்பு கவசங்களை வழங்குமாறு, அமைச்சர் டிலான் பெரேரா, தங்களுக்கு ஆலோசனை வழங்கியதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் அமல் சேனாலங்காதிகார தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு செல்லும் முன், ஒப்பந்தம் கைச்சாத்திடும் சந்தர்ப்பத்திலேயே, பாதுகாப்பு கவசங்களை வழங்கும் செயற்திட்டம், முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவசங்கள் வழங்கப்பட்டதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் பணியாற்றி நாடு திரும்பும் தொழிலாளர்கள், காய்ச்சல், இருமல், களைப்பு, மூச்சுதிணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அருகில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு சென்று, தமது கடவுச்சீட்டை சமர்ப்பித்து, நோய் தொடர்பான சோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐரோப்பாவின் சில நாடுகளிலும், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இவ்வைரஸினால் தாக்கப்பட்ட நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். மேர்ஸ் கொரோனா வைரஸ், இலங்கையில் பரவுவதை தடுக்கும் நோக்கில், சுகாதார அமைச்சு, முஸ்லிம் சமய விவகார, சிவில் விமான சேவைகள் அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியன இணைந்து குழுவொன்றை நியமித்துள்ளதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment