Friday, April 25, 2014

பொதுபல சேனாவுக்குத் தேவையாயிருப்பது அரசாங்கத்தைக் கவிழ்க்கவே!

அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான சூழ்ச்சியில் பொதுபல சேனா மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் குறிப்பிடுகிறார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கீழ்வருமாறும் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினர்களும், சிங்கள, தமிழ், முஸ்லிம்களில் இலட்சக் கணக்கானோரும் உயிர்நீத்து 30 ஆண்டு போரை முடிவுக்குக் கொண்டுவந்துள்ள இவ்வேளை, ஜனநாயக நாடாக இலங்கையில் தற்போது நின்று நிலவுகின்ற அமைதியை சீர்குலைத்து மக்களை இருண்டதொரு யுகத்திற்கு அழைத்துச் செல்ல பொதுபல சேனா முயல்கின்றது.

இதனால் மத ஒருமைப்பாடு இலங்கையில் இல்லை என சிலர் பேசிக் கொள்ள இது காரணமாக அமைந்துள்ளது. இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் மதப் பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகளை விசாரிப்பதெற்கென விசேட பொலிஸ் பிரிவு ஒன்று 24 ஆம் திகதி உருவாக்கப்பட்டது தொடர்பில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

ஜனாதியை பதவி விலக்குவதற்கும், இன்னொருவரை ஜனாதிபதியாக நியமிப்பதற்கும் தம்மால் முடியும் என குறிப்பிடுகின்ற இந்த பல சேனாவினர், அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக முழு முயற்சியுடன் செயற்படுகின்றார்கள் என எண்ணத் தோன்றுகின்றது. அவர்களின் குறிக்கோள்களையும் செயற்பாடுகளையும் எடுத்து நோக்கும்போது, எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளை விடவும் மிகமோசமான அமைப்பு என்பது தெளிவாகின்றது.

பொதுமக்களுக்கு நல்வழிகாட்ட வேண்டிய மரியாதை மிகு மதகுருக்கள், இவ்வாறு அரச திணைக்களமொன்றில், நிறுவனமொன்றில் அத்துமீறி நுழைவதும், அடாவடித்தனங்கள் புரிவதும் நாட்டுக்குள் தப்பான விடயங்கள் தோன்றுவதற்கு இடமளிக்கும். உண்மையில் இவர்களுடைய செயற்பாடானது, புத்த மாதவனின் உபதேசித்திற்கு முற்றிலும் மாறுபாடானதும், இழுக்கு உண்டாக்குவதுமாகும்.

அதனால், சட்டத்திற்கு விரோதமான இவர்களுடைய செயற்பாடுகளை மீண்டும் மீண்டும் நாங்கள் வன்மையாக்க் கண்டிக்கின்றோம்.. எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம்.. எனவே, சட்டத்தை நிலைநிறுத்துமாறு பொலிஸாரிடமும் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்களிடமும் நான் கேட்டுக் கொள்கின்றேன்.

(கேஎப்)

1 comments :

Anonymous ,  April 26, 2014 at 6:53 AM  

மக்களுக்கு நல்வழிகாட்ட வேண்டிய மரியாதை மிகு மதகுருக்ககளின் இவ்வாரான கீழ்த்தரமான, விரோதமான செயற்பாடுகளை நாங்கள் வன்மையாக்க் கண்டிக்கின்றோம். எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம்..

போலி மதவாதிகளை வளர்க்கும் மகிந்தரின் வாழ்வு அதே மதவாதிகளினலே அழிக்கப்படும் என்பதே உண்மை.

Wait and See

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com