கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு செவிடன் காதில் ஊதிய சங்காய் அது!
“கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் ஆசிரியர்களின் விபரங்களை திரட்டுவதற்காக வழங்கப்பட்ட படிவங்களை, 93.6 வீதமான ஆசிரியர்கள் பூர்த்தி செய்து அனுப்பி வைத்துள்ளார்கள். ஆயினும், ஒரு சில தொழிற் சங்கங்கள் குறிப்பிட்ட படிவத்தினை புறக்கணிக்குமாறு ஆசிரியர்களைக் கேட்டுக் கொண்ட போதிலும் ஆசிரியர்கள் அவர்களின் கருத்திற்கு செவிசாய்க்கவில்லை”
இவ்வாறு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம். ரி. ஏ. நிஸாம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
“ஆசிரியர்களின் எதிர் கால நலன்களை முன்னிட்டு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் இணையத்தளமொன்றை உருவாக்குவதற்காக ஆசிரியர்களின் விபரங்களை திரட்டிக் கொண்டிருக்கின்றது. இதற்கமைவாக திணைக்களத்தினால் வழங்கப்பட்ட படிவங்களை புறக்கணிக்குமாறு ஆசிரியர் தொழிற் சங்கம் ஒன்று ஆசிரியர்களிடம் கேட்டுக் கொண்ட போதிலும், ஆசிரியர்கள் அவற்றிற்கு செவிசாய்க்கவில்லை.
இதன்மூலமாக ஆசிரியர்கள் தகவல்கள் திரட்டப்படுவதன் உண்மைத் தன்மையை உணர்ந்துள்ளார்கள் என்பது தெளிவாகின்றது. அத்தோடு, ஆசிரியர்கள் இதனை ஒரு இனரீதியான செயற்பாடாகப் பார்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 வலயங்களில் 21 ஆயிரத்து 167 ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களில் 19 ஆயிரத்து 814 (93.6 வீதம்) ஆசிரியர்கள் படிவங்களை பூர்த்திசெய்து அனுப்பி வைத்துள்ளார்கள். மீதியாகவுள்ள ஆசிரியர்கள் எதிர்வரும் புதன்கிழமை வரை படிவங்களை பூர்த்தி செய்து அனுப்புவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
(ஷஹாப்தீன்)
No comments:
Post a Comment