Monday, April 7, 2014

ஒடுக்குமுறையின் புதிய வடிவமே இலங்கை மீதான ஜெனீவா தீர்மானம் – பசில்!

இலங்கையில் யுத்த நிலைமை நிலவிய போது கொண்டுவரப்படாத பிரேரணைகள் நாட்டில் சமாதானம் நிலவும் காலத்தில் கொண்டுவரப்பட்டுள்ளமை மேற்கு நாடுகள் இலங்கை போன்ற வளர்முக நாடுகள் மீது மேற்கொள்ளும் வழமையான பொருளாதார ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாகவே இலங்கை மீதான ஜெனீவா தீர்மானம் அமைந்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் சிறிய நாடுகளின் வளர்ச்சியினை நசுக்குவதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் மேற்கொண்டுவரும் இவ்வாறான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் எமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே நாம் செய்யக் கூடிய பணியாகும் என குருநாகல், கேகாலை ஆகியநகரங்களில் நடைபெற்ற அரச அதிகாரிகளுக்கான மாநாட்டின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதனைவிட இந்த ஆண்டில் மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய பொருளாதார அபிவிருத்திப்பணிகள் பற்றி அரச அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்கும் மகாநாடு குருநாகல் நகரில் நடைபெற்ற போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மேலும் இங்கு பேசிய அமைச்சர் தற்போது காணப்படும் சவால்களை வெற்றிகொண்டு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் துணிவு எமது அரசுக்கு உண்டு எனக்குறிப்பிட்டார்.

இதனைவிட இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து மறைமுகமான பொருளாதாரத் தாக்குதல்கள் அல்லது நவ குடியேற்றவாத கொள்கைகள் இலங்கை மீது திணிக்கப்பட்டே வந்துள்ளன என்பதுடன் இதன் புதிய வடிவமாகவே தற்போது இலங்கை மீது நான்கு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

யுத்தம் நிலவிய காலத்தில் பேசாமடத்தையாக இருந்தநாடுகள் சமாதானம் நிலவும் போது அவற்றை குழப்பியடித்து மீண்டும் யுத்த நிலைமையொன்றுக்கு மறைமுகமான கொள்கையை பரப்பி வருகின்றன என்பதுடன் இவ்வாறான செயற்பாடுகள் இலங்கை மீது மட்டுமல்லாமல் வேறு பல நாடுகளிலும் முன்னர் திணிக்கப்பட்டுள்ளன. 

இவை அனைத்தும் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தைத் தடுத்து நாடுகளை அடிமைப்படுத்தும் ஒரு செயற் பாடாவே நாம் கண்டுகொள்ள முடியும் எனவே இவ்வாறான சவால்களை வெற்றிகொண்டு எமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் எமக்கு ஏற்பட்டுள்ளது. 

மேலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான இன்றைய அரசு சவால்களுக்கு முகம் கொடுத்து நாட்டைக் கட்டியெழுப்பும் திறனைக் கொண்டுள்ளது எனக்குறிப்பிட்டார்.

இதனைவிட கடந்த ஆண்டு தொடக்கம் குருநாகல், புத்தளம், கேகாலை ஆகிய மாவட்டங்களின் அபிவிருத்திக்கென 5000 கோடி ரூபா நிதி செலவிடப்பட்டு வருகின்றன என்பதுடன் இந்த ஆண்டும் மாவட்ட செயலகங்கள் ஊடாக அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com