இனிதாக வந்திட்டாள் சித்திரைப் பெண்ணாள்!
-கவிஞர் கலைமகன் பைரூஸ்
இளவேனில் காலத்தே இனிதாய் பூத்து
இந்துவுக்கும் பௌத்தனுக்கும் மகிழ்வீந்து
இளமுகத்தொடு நாளும் மகிழ்ந்திருக்க
இனிதாக வந்திட்டாள் சித்திரைப் பெண்ணாள்!
அதிகாலை துயிலெழுந்து இறையைப் போற்றி
அழகான ஆடைகள் எடுப்பா யணிந்து
சித்திரைப் புத்தாண்டீதில் சுற்றம் சூழ
சேர்ந்தே மகிழ்ந்திருக்க வந்தாள் சித்திரையாள்!
பட்டாசு பலவாக கொளுத்தி யின்று
பணியாரம் கொக்கீசொடு பழப்பாகும்
முட்டுகின்ற மணத்தோடு பண்டம்பலவும்
முனியாமல் வழங்கிட வந்தாள் சித்திரையாள்!
கோயில் விகாரையெங்ஙனும் மணியோசை
கேட்டே விரைந்து செல்வர் மனம்மகிழ்வர்
போயிடுமே துன்பமெங்கும் பண்டிகையீதில்
பந்தமாய் எல்லோரும் மகிழ்ந்திட சித்திரையாள்!
எத்திக்கும் புகழ்மணக்க வந்ததுகாண் சித்திரையாள்
எங்களுக்குள் இல்லை பிரிவினைதான் என்றிடத்தான்
நித்திலத்து இந்து - பௌத்தன் கைகோக்க
நலமாக வந்ததுகாண் சித்திரைப் பெண்ணாள்!
காவிதாவும் கமலாவும் கைகோத்துச் செல்கின்றார்
கமலனும் விமலதாசவும் மனம்மகழ்ந்து செல்கின்றார்
புவியினிலே மலர்ந்திட்ட இப்புத்தாண்டீது -நற்
பண்பினையே வளர்த்திட ஆசிப்போமே நாம்!
0 comments :
Post a Comment