ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இருவரும் தென் மற்றும் மேல் மாகாண தேர்தலில் கணக்குப் பாடத்தில் சித்தியடையவில்லை என, துறைமுக, பெருந்தெருக்கள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில் -
“இவர்கள் இருவரும் கணக்குப் பாடத்தை நன்கு கற்றுத் தேரியதன் பின்னரே தேர்தல் முடிவுகள் பற்றி அலச வர வேண்டும். கணக்கில் பிழைத்தவர்களுக்கு மேலே செல்ல முடியாத என்பதை இந்த இருவரும் இன்னும் தெரியவில்லை.
ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டுக்குப் பயணமாகியுள்ளார். அமெரிக்காவில் பல்கலைக் கழகமொன்றில் விரிவுரையாளராக கடமையாற்ற அவரால் இயலும். அங்கு, தொடர்ந்து தோல்வியுறும் நிலைபற்றி அவரால் விளக்கமுடியும். தோல்வியுறும் வழிபற்றித் தெரியுமா? என வெளிநாட்டவருக்குப் பாடம் கற்பிக்க அவரால் இயலும். வெற்றிபெறும் முறை பற்றி உலகிற்கு எடுத்துச் சொல்ல எங்களால் இயலும்.
அரசாங்கம் எனும் மரத்தின் வேர் ஆட்டம் காண்பதாகவும், அதனால் இலகுவில் மரத்தைச் சாய்த்துவிட முடியும் எனவும் முழங்குகின்றார் ரணிலார். அவர் அரசாங்கத்தை வாடிப் போன வாழை மரமாக கருதுகின்றார் போலும்…
எதிர்வரும் ஊவா மாகாண சபைத் தேர்தலிலும் மிகச் சிறப்பான வெற்றியை அரசாங்கம் தனதாக்கிக் கொள்ளும் என்பதை இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். ஊவா மாகாண சபை வெற்றி கண்டதன்பின் ரணிலும், அநுரவும் கணக்குப் பார்க்கப் போகாமல் இருந்தால் போதும்”
(கேஎப்)
No comments:
Post a Comment