Thursday, April 17, 2014

ஊடகவியலாளர்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை 4து இடம்!

ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்குத் தண்டனை விதிக்கப்படாத நாடுகளின் பட்டியலில், சிறிலங்கா நான்காவது இடத்தை வகிப்பதாக, சிபிஜே என்று அழைக்கப்படும் நியுயோர்க்கை தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்தப் பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. .

இதன்படி, கடந்த பத்தாண்டுகளில் 100 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட போதும், அத்தகைய கொலைகளுக்கு காரணமானவர்கள் எவரையும் தண்டிக்க நடவடிக்கை எடுக்காத ஈராக், இந்தப் பட்டியலில் முதலிடத்தை. வகிக்கிறது.

இரண்டாவது இடத்தை சோமாலியாவும், மூன்றாவது இடத்தை பிலிப்பைன்சும் வகிக்கின்றன.

கடந்த பத்தாண்டுகளில் 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ள போதிலும், அவர்களில் ஒருவருடைய மரணத்துக்கும் காரணமானவர்களைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்காத சிறிலங்கா, இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்ததற்கு இந்த தண்டனை விலக்களிப்பே காரணம் என்றும் சிபிஜே தெரிவித்துள்ளது.

சிறிலங்கா தொடர்பாக சிபிஜே வெளியிட்டுள்ள குறிப்பில்,

“ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் போர் முடிவுக்கு வந்திருந்த போதிலும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தாம் பிரதமராகவும், அதிபராகவும் பதவியில் இருந்த அரசாங்கங்களின் காலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் கொலைகளுக்குத் தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கான அரசியல் ரீதியான விருப்பை வெளிப்படுத்தவில்லை.

ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை மற்றும் இராணுவம் தொடர்பான செய்தியை வெளியிட்டதற்காக கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் உள்ளிட்ட பல கொலைகளுக்குப் பின்புலத்தில் சிறிலங்கா அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகளே இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.

சிறிலங்காவில் தண்டனை விலக்களிப்பே ஊடகவியலாளர்கள் புலம்பெயர்வதற்கான காரணம் என்று சிபிஜேயின் ஆய்வில் தெரியவந்துள்ளது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடுமையான மோதல்கள் நடந்து வரும் சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் பாகிஸ்தான், ரஷ்யா, நைஜீரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் இலங்கைக்கு அடுத்தபடியாக முதல் 13 நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. (JM)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com