Friday, April 18, 2014

பயங்கரவாதம் ஜனநாயக வடிவில் தோற்றம் எடுக்கின்றது. 14 வது ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் கோட்டா

எல்ரிரிஈ சர்வதேச வலையமைப்பு, ஜனநாயக வடிவில் தோன்றுகின்றது. இதனால் சில நாடுகள், இவர்கள் தொடர்பாக கண்மூடித்தனமாக செயற்படுவதாக, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மலேசியாவில் நடைபெறும் 14வது ஆசிய பாதுகாப்பு சேவைகள் மாநாட்டில் உரையாற்றும்போதே, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.

சர்வதேச பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் எனும் தொனிப்பொருளில் உரையாற்றிய அவர், இலங்கையிலிருந்து பயங்கரவாதம் பூண்டோடு ஒழித்துக்கட்டப்பட்ட போதிலும், சர்வதேச பயங்கரவாத வலையமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது. அவர்கள், இலங்கைக்கு எதிராக பாரிய பிரசார வேட்டையை ஆரம்பித்துள்ளதாகவும், திரு. ராஜபக்ச தெரிவித்தார்.

எல்ரிரிஈ அமைப்பு, ஜனநாயக முகமூடி அணிந்து செயற்பட்டு வருவதாகவும், அவர் சுட்டிக்காட்டினார். அரசியல் செயற்பாடுகளுக்கும் மனிதாபிமான நிவாரணங்களுக்கும் முன்நிற்பதாக கூறி, அவ்வமைப்பு செயற்பட ஆரம்பித்துள்ளது. இதனால் எல்ரிரிஈ பயங்கரவாத வலையமைப்புடன் தொடர்புடைய அமைப்புகள் குறித்து, சில நாடுகள் குருடர்கள் போன்று செயற்படுவதாகவும், பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

அத்துடன் இந்த சர்வதேச வலையமைப்பின் செயற்பாட்டாளர்கள், சட்டவிரோதமான முறையில் செயற்பட்டு வருவதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளாகிய அவர்கள், இலங்கையில் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நோக்கில், செயற்பட்டு வருவதாகவும், தெரிவித்தார்.

எல்ரிரிஈ வலையமைப்பு, புலம்பெயர் தமிழர்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு செயற்படும் அதேநேரம், உலகெங்கும் சுமார் 30 நாடுகளில் தமது செயற்பாடுகளுக்கென, உதவி திரட்டி வருகின்றது. 1993ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை இவ்வலையமைப்பு, எல்ரிரிஈ அமைப்பிற்கு வருடாந்தம் 50 மில்லியன் டொலர் தொடக்கம் 75 மில்லியன் டொலர் வரையிலான தொகையை வழங்கியுள்ளது. 2002ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை இவ்வாறு வழங்கப்பட்ட நிதி, 200 மில்லியன் அமெரிக்க டொலரை தாண்டியுள்ளதாக, பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment