பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்க செயற்படும் "கோபி'"என்றழைக்கப்படும் கதீபனின் தாய் கைது!
நாட்டில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கும் செயற் பாட்டில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் 'கோபி'யின் தாயாரும் மற்றுமொரு பெண்ணும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பிரதேசத்தில் வைத்து நேற்று முன்தினம் டி. ஐ. டி. யினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் விசாரணைக்காக
கொழும்புக்கு அழைத்துக் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
தலைமறைவாக இருக்கும் கோபியை தேடிக்கைது செய்யும் நோக்கிலும், கோபி தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே அவரது தாயாரான 63 வயதுடைய ராசமலர் என்பவரும் மற்றுமொரு பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கும் நோக்கில் ஈடுபட்ட 'கோபி' என்றழைக்கப்படும் கதீபன் பொன்னையா செல்வநாயகம், மற்றும் 'அப்பன்' என்றழைக்கப்படும் நவரட்ணம் நவநீதன் ஆகிய இருவரையும் கைது செய்யும் பொருட்டு வடக்கில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள், முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சந்தேக நபர்கள் இருவரையும் விரைவில் கண்டு பிடிப்பதற்காக பாதுகாப்புப் படையினரும்., பொலிஸாரும் பொது மக்களின் ஒத்துழைப்பை நாடுவதாகவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். கோபியின் தாயாரும் மற்றுமொரு பெண்ணும் தொடர்ந்தும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment