இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை பலவீலமடைகின்றது! பிரேரணைக்கு பல்வேறுநாடுகள் எதிர்ப்பு!
இலங்கைக்கு எதிரான பிரேரணை உண்மைக்கு புறம்பான விடயங்களினடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதால் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் அரசாங்கம் அதனை ஏற்காது நிராகரிக்கும் எனவும் ரஷ்யா, சீனா, கியூபா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அமெரிக்காவின் பிரேரணை யிலுள்ள விடயங்களை நிராகரித்துள்ள நிலையில் ஜெனீவா பிரேரணை பலவீனமடைந்து வருகின்றது என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
ஐ. ம.சு.மு. ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. ஜெனீவா மாநாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்.
அமெரிக்க பிரேரணையிலுள்ள விடயங்களுக்கு எதிராக பல நாடுகள் ஜெனீவாவில் உரையாற்றியுள்ளன. அதனை நிராகரித்து அவை கருத்து வெளியிட்டுள்ளன. புலம்பெயர் அமைப்புக்களினதும் கருத்துக்கள் மேலைத்தேய நாடுகளினதும் கருத்துக்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளன. ஜெனீவாவில் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஆற்றிய உரையைத் தொடர்ந்து பல நாடுகள் இலங்கைக்கு சாதகமாக உரையாற்றியுள்ளன.
அமெரிக்கா அடங்கலான மேலைத்தேய நாடுகளின் தேவைப்படி ஏனைய நாடுகளைத் தவறாக வழி நடத்த முடியாது என்பது இதன் மூலம் புலனாகிறது. அமெரிக்க பிரேரணையிலுள்ள விடயங்கள் ஒவ்வொன்றாக நிராகரிக்கப்பட்டுள்ளன. இலங்கையல்லாத நாடுகள் இவ்வாறு பிரேரணையை நிராகரித்திருப்பது இலங்கைக்கு சாதகமாக உள்ளது. இது இலங்கைக்கு கிடைத்த வெற்றியாகும். இது மற்றைய நாடுகளின் உள் விவகாரங்களில் ஏனைய நாடுகள் தலையீடு செய்வதை தடுக்க வழிவகுக்கும்.
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நெருங்கிய உறவு காணப்படுகிறது. அங்கு தேர்தல் நடைபெறும் நிலையில் அதனடிப்படையிலே இலங்கையின் முடிவும் இருக்க்ம். இந்திய பிரதமரை அண்மையில் ஜனாதிபதி சந்தித்தார். சில சில விடயங்கள் தொடர்பில் இரு தரப்பிற்குமிடையில் தொடர்ந்து பேச்சு நடக்கிறது.
இலத்தின் அமெரிக்க நாடுகள் இலங்கை தொடர்பில் சாதகமான பேச்சையே கொண்டுள்ளன. ஏனைய நாடுகளுக்கு இலங்கையின் உண்மை நிலை குறித்தும் தெளிவுபடுத்தி வருகிறோம். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வேகமாக செயற்படுத்தப்படுகிறது. இங்கு வந்து உண்மை நிலையை அறியாமலே இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுகள் அடுக்கப்படுகின்றன. எவருக்கும் இங்கு வந்து உண்மை நிலையை நேரில் பார்க்க முடியும்.
அமெரிக்க பிரேரணையை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். நவநீதம் பிள்ளையின் அறிக்கையையும் நிராகரிக்கிறோம். ஒவ்வொருவர் சொல்லும் குற்றச்சாட்டின் அடிப்படையில் எந்த நாடு குறித்தும் விசாரிக்க முடியாது. இலங்கை யுத்தத்தின் பின் பாரிய முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த முறை ஜெனீவாவில் வடபகுதி தேர்தலை நடத்துவதாக உறுதியளித்தோம். அதன்படி வட மாகாண தேர்தலை நடத்தி முடித்துள்ளோம். இதனை பாராட்ட வேண்டும்.
இலங்கைக்கு வந்திராத நாடுகளின் கூற்றுப்படியே ஜெனீவா பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது. டயஸ் போராக்களும் அரச சார்பற்ற நிறுவனங்களுமே இதற்கு தகவல் வழங்கியுள்ளன. இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில் அமெரிக்க செனட் சபையிலும் மாறுபட்ட கருத்தே காணப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான பிரேரணையில் உள்ள விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை. அதனால் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் அதனை ஏற்க முடியாது. அரசியலமைப்பின் பிரகாரம் மக்கள் தந்துள்ள ஆணைப்படி மக்களுக்கு தேவையானவற்றை அரசாங்கம் முன்னெடுக்கும். மனித உரிமை மீறலுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்லும் உரிமை எமது நாட்டிலே உள்ளது. மேலைத்தேய நாடுகளில் கூட இந்த உரிமை வழங்கப்படவில்லை என்றார்.
சர்வதேச ரீதியில் இலங்கை முகம்கொடுக்கும் சவால்களை தோற்கடித்து வென்ற சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு இந்த தேர்தல் மூலம் சர்வதேச சமூகத்துக்கு சரியான பதில் வழங்க முடியும் என்றார்.
0 comments :
Post a Comment