எல்.ரி.ரி.ஈ.யினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் எங்கே – பாகிஸ்தான்
இலங்கை மீது யுத்தக் குற்ற விசாரணை நடத்துவது நல்லிணக்க முன்னேற்றத்திற்கான சிறந்த வழியாக அமையாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலியா பிஷொப் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமை ஊக்குவிப்புக்கு அவுஸ்திரேலியா இலங்கையுடன் தொடர்ந்து இணைந்து செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் மாத்திரமே பொறுப்புடைமை நல்லிணக்க நிஜ முன்னேற்றங்களை ஏற்படுத்த முடியும் என ஜூலியா பிஷொப் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள போதும் அவுஸ்திரேலியா மனித உரிமை பேரவையில் அங்கத்துவம் பெறாததால் வாக்களிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு தனி, சர்வதேச தலைமையிலான விசாரணைக்கான தீர்மான அழைப்பு இந்த நேரத்தில் முன்னோக்கி செல்ல சிறந்த வழியென நம்பிக்கை இல்லை என்று ஜூலியா பிஷொப் குறிப்பிட்டுள்ளார். எனினும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளை செயற்படுத்துமாறும் ஒரு பயனுள்ள மற்றும் வெளிப்படையான சமரச திட்டத்தை செயற்படுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலியா பிஷொப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாகிஸ்தான் அமெரிக்காவின் அனுசரணையுடனான இந்த பிரேரணையை எதிர்த்து வாக்களித்துள்ளது. இந்தப் பிரேரணையில் எல். ரி. ரி. ஈயினால் மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலைகள் கவனத்திற்கு எடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் இந்தப் பிரேரணை வேண்டுமென்றே இலங்கை போன்ற நாடுகளை இலக்கு வைத்து கொண்டுவரப்பட்டிருப்பது வருந்தத்தக்க செயலென்றும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரேரணைக்கு அனுசரணையளிக்கும் நாடுகளில் மனித உரிமை மீறல்கள் சரியான முறையில் பேணப்பட வில்லை என்பதையும் நாம் அவதானத்துக்கு எடுத்துக்கொள்வது அவசியம் என்று கூறியுள்ள பாகிஸ்தான் இந்த அமெரிக்க பிரேரணை அரசியல் உள்நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளதே தவிர மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் கொண்டுவரவில்லை எனத் தெரிவித்தது.
இலங்கையின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு போதியளவு நிதி வசதி இல்லாத காரத்தினால் இந்தப் பிரேரணை தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment