அரச வானொலியில் பாங்கொலி ஐந்து நேரமும் ஒலிக்க நாமே வழிவகுத்தோம்....! ஜனாதிபதி (படங்கள் இணைப்பு)
தேர்தல் காலங்களில் பொய்ப் பிரச்சாரங்கள் நீளுகின்றன... உண்மை ஒருபோதும் பொய்ப்பதில்லை...
“நாங்கள் பௌத்த, இந்து, முஸ்லிம் மத வழிபாட்டுத் தலங்களில் மக்கள் நிம்மதியாக தங்கள் மதக்கிரியைகளை நடாத்திச்செல்ல வழிவகுத்துள்ளோம். இவ்விடங்களுக்கு சுதந்திரமாக சென்று வழிபடக்கூடிய நிலையை உறுதியாக்கியுள்ளோம்... எங்கள் ஆட்சியிலேயே ஐந்து நேரமும் அரச வானொயில் பாங்கொலி ஒலிக்கச் செய்தோம்... சிலர் தேர்தல் காலங்களில் பொய்ப் பிரச்சாரங்களைச் செய்கின்றார்கள்...”
இன்று (15) புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வெலிகாமம், கப்புவத்தை முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாசலைத் திறந்துவைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் -
நாங்கள் எப்போதும் முன்னேறிச் செல்ல வேண்டுமே தவிர பின்னோக்கிச் செல்லக்கூடாது... தேர்தல் பிரச்சாரக் காலங்களில் பொய்ப்பிரச்சாரங்களே மேலாதிக்கம் செலுத்துகின்றன. சில மேடைகளில் ஒலிவாங்கிகளில் பாங்கொலி சொல்லாமல் நிறுத்துவதற்கு அரசாங்கம் ஆவன செய்துவருவதாக பொய் கட்டவிழ்த்துவிடப்பட்டன. பொய் ஒருபோதும் வெல்லவே மாட்டாது.
அனைவரும் தங்களது நாட்டின் மீது அன்பு செலுத்தி அதனை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல ஆவன செய்ய வேண்டும். அத்தோடு, முஸ்லிம்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க - அதற்காக தங்களாலான பங்களிப்பை வழங்க வேண்டும். முஸ்லிம்களுக்கு கல்வி மிக முக்கியமாக இருக்கின்றது. வியாபாரத்தின்பால் பிள்ளைகளை ஈடுபடுத்துவதற்கு முன் அவர்களை கல்வி கற்றவர்களாக ஆக்குமாறு உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்...
அன்று வடக்கிலிருந்து முஸ்லிம்கள் இரண்டு மணித்தியாலயத்திற்குள் வெளியேற்றப்பட்டனர். அதேபோல காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் கொலைசெய்யப்பட்டனர். இப்பொழுது நிலைமை மாறியுள்ளது. தத்தமது மதக் கிரியைகளைச் சுதந்திரமாகச் செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
(தமிழில்) இன்று புதிதாக புனர்நிர்மாணம் செய்த, இந்த கப்புவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலைத் திறந்துவைக்கக் கிடைத்தது பெரும் பெரும் பாக்கியம். எனக்கு மிகவும் சந்தோசம். நீண்ட காலமாக உள்ள இந்தப் பள்ளிவாசல் உங்கள் ஊருக்கு வரப்பிரசாதமாகும். ரிபாய் தரீக்கா தங்கள் மார்கள் ஆன்மீகத் தலைவர்கள்.. நல்ல பல சேவைகளைச் செய்துள்ளார்கள். இதுதான் உண்மை.. இதுதான் இதிகாசம்... இதை நாங்கள் ஒருநாளும் மறக்கக்கூடாது.
காத்தான்குடி பள்ளிவாசல் கட்ட அத்திரவாரமிட்டோம்.. நுவரெலிய புதிய பள்ளிவாசல் புனர்நிர்மாணம் செய்தோம்... அளுத்கம சீனாவத்த பள்ளிவாசல் திறந்து வைத்தோம். இன்று இந்த ஜும்ஆப் பள்ளியைத் திறந்துவைத்தேன். இதுவெல்லாம் நான் பெற்ற பாக்கியம்!
இந்நாட்டில் வாழக்கூடிய முஸ்லிம்கள் அன்றும், இன்றும், என்றும் எமது சகோதர மக்கள்! பள்ளி, கோயில், தோவாலயம், விகாரை எல்லாவற்றையும் நாம் ஒன்றாகவே பார்க்கின்றோம். நான் உங்களைப் பாதுகாக்கின்றேன். இன்று பள்ளிவாசல்களில் ஐந்து நேரமும் பாங்கு சொல்லக்கூடிய முறையை நாங்களே கொண்டு வந்தோம். எங்கள் உறவை இல்லாமற் செய்ய சிலபேர் மோசமான காரியங்கள் செய்கிறார்கள். இனவாதம் பேசி, மதபேதம் பேசி மக்களைக் குழப்புகிறார்கள். அது ஒருபோதும் சாத்தியமாகாது.
பலஸ்தீனத்திற்கு நாங்கள் ஆதரவு வழங்கினோம். முஸ்லிம் நாடுகள் எல்லாம் எங்களுக்கு நேச நாடுகள்தான். சாந்தி, சாமாதானம், சகோதரத்துவம், சகவாழ்வு இவைதான் இஸ்லாம் மார்க்கத்தின் முக்கிய அத்திவாரம். நபிகளார் சொன்னார்கள்...“தான் வாழ்கின்ற நாட்டை ஆதரிப்பது இஸ்லாத்தின் ஒரு பகுதியாகும்” நீங்கள் வாழ்கின்ற நாட்டை நீங்கள் பாதுகாப்பது உங்கள் உயிரிலும் மேலானது. நாட்டில் எல்லோரும் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். அதுதான் எனது தேவை. இந்த ஜும்ஆ பள்ளிவாசல் இன்னுமின்னும் வளர்ச்சி பெற வேண்டும். உங்கள் எல்லோருக்கும் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிட்டார்.
அகில இலங்கை றிபாய்த் தரீக் சங்கத்தின் ஆன்மீகத் தலைவரும், ஆயுட்கால போசகருமான றிபாய் மௌலானா அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் யூ.பீ. ஸெய்யத் முஹம்மத் ஆசிக் தங்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், விசேட அதிதிகளாக சங்கைக்குரிய ஏ.பீ. ஜாபிர் தங்கள் றிபாய் மௌலானா, மேல்மாகாண ஆளுநர் அஸ்ஸெய்யித் அலவி மௌலானா, சிரேட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். பௌஸி, இளைஞர் விவகார மற்றும் திறன் விருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் அல்ஹாஜ் பைஸர் முஸ்தபா, ஊடக தகவல் அமைச்சின் கண்காணிப்ப உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர், ஜனாதிபதி சட்டத்தரணி அல்ஹாஜ் பாயிஸ் முஸ்தபா கலந்து கொண்டனர்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment