Friday, March 28, 2014

புலன்விசாரணைகள் பல்வேறு கோணத்தில்! விமானத்தின் பாகங்களைத் தேடும் முயற்சி இடைநிறுத்தம்

விபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் விமானத்துக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து விசாரணையில், அனைத்து கோணங்களையும் புலனாய்வாளர்கள் ஆராய்கிறார்கள். எதையும் நிராகரிக்கவில்லை. இயந்திரக் கோளாறு, மின் தடை, விமானக் கடத்தல், நாசவேலை, விமானி அல்லது இணை விமானி வேண்டுமென்றே எடுத்த நடவடிக்கை, என்று அனைத்துக் கோணங்களிலும் புலனாய்வு நடக்கிறது.

விபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்களைத் தேடும் முயற்சி, இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக நேற்று மீண்டும் நிறுத்தப்பட்டதாக அவுஸ்திரேலியா அறிவித்திருக்கிறது. வியாழனன்று இந்த விமானத்தைத் தேடும் முயற்சிக்குச் சென்ற ஆறு விமானங்களும் தங்கள் தளத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. கப்பல்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றன என்று அவுஸ்திரேலிய அதிகாரிகள் கூறினர்.

புதன்கிழமையன்று பிரெஞ்சு செயற்கை கோள் படங்கள் இந்தப் பகுதியில் விமானத்தின் பாகங்களாக இருக்கக்கூடிய 122 பொருட்கள் மிதப்பதைக் காட்டுவதாக மலேசியா கூறியது.

இந்தப் படங்கள் தான் இதுவரை கிடைத்ததிலேயே மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருப்பதாகவும் அது கூறியது. இதனையடுத்து நேற்று முன்தினம் புதன்கிழமை இந்தப் பகுதியில் தேடிய விமானங்கள், மூன்று பொருட்களைக் கண்டதாகவும், ஆனால் பல முறை திரும்பத் திரும்ப விமானங்கள் பறந்தும், மீண்டும் அவைகளைக் காண முடியவில்லை என்றும் அவுஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு நிறுவனம், அம்சா கூறியது. இதுவரை இந்தப் பகுதியில் விமானத்துடன் தொடர்புடைய ஒரு பொருளும் மீட்கப்படவில்லை.

ஆனால் இந்த பிரெஞ்சு செயற்கைகோள் அனுப்பிய படங்கள், இந்த பொருட்கள் வௌ;வேறு இடங்களில் இருந்து மிதந்து வந்த பொருட்கள் அல்ல, ஒரே இடத்தில் மிதக்கும் விமானப் பொருட்களாக இருக்கலாம் என்று காட்டுவதாக, அப்படங்களை ஆராய்ந்த வல்லுநர்கள் கூறினர்.

இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டால், அவை விமானத்தின் பாகங்கள் என்று தெரிந்தால், அதை வைத்து விமானம் விழுந்த இடத்தை வல்லுநர்கள் கணிக்க முயல முடியும், ஆனாலும் அது எளிதாக இருக்காது' என்று அவுஸ்திரேலியாவின் நியு சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் கடலியல் துறை ஆய்வாளர், டொக்டர் எரிக் வான் செபில் பிபிசியிடம் பேசுகையில் கூறினார். இந்தப் பகுதியில் கடல் நீர்ச் சுழல் உலகிலேயே மிகவும் பலமானதாக இருக்கும் என்றார் அவர். 'ஒவ்வொரு நாளும், இதுபோன்ற உடைந்து மிதக்கும் பொருட்கள், எளிதாக எந்தத் திசையிலும், 50 லிருந்து 100 கிமீ தூரம் வரை அடித்துச் செல்லப்படும், அந்த அளவுக்கு இந்த இந்தியப் பெருங்கடல் பகுதி கொந்தளிப்பானது' என்றார் வான் செபில்.

இந்த விமானத்தின் தலைமை விமானி, ஸஹாரி அஹமது ஷாவின் வீட்டில் அவர் பயன்படுத்திய, விமானப் பயண விளையாட்டுக் கருவியை அமெரிக்காவின் மத்திய புலன் விசாரணைக்கழக (எப். பி.ஐ) அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சி ஏறக்குறைய முடிவடையும் நிலையில் இருப்பதாக அமெரிக்க மத்திய புலன்விசாரணைக் கழகத்தின் தலைவர் ஜேம்ஸ் கோமி கூறினார். இன்னும் ஓரிரண்டு நாட்களில் இந்த ஆய்வு முடிந்துவிடும் என்று தான் எதிர்பார்ப்பதாக அவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com