அநீதியான பிரேரணைக்கு எதிராக வாக்களித்த நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கின்றது இலங்கை!
தர்மத்தை மீறி பலம்வாய்ந்த நாடுகள் இலங்கைக்கு எதிராக அழுத்தத்தைப் பிரயோகித்தமை ஒன்றும் இரகசியமல்ல!
சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தர்மத்தை மீறி பலம்வாய்ந்த நாடுகள் இலங்கைக்கு எதிராக அழுத்தத்தைப் பிரயோகித்தமை ஒன்றும் இரகசியமல்ல. ஜெனீவா முடிவு நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்ததொன்று. எனினும் நாடு என்ற வகையில் இந்த அநீதிக்கு எதிராக உச்சளவில் போராடினோம் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித் துள்ளார்.
அத்துடன் பெரும்பான்மை வாக்குகளால் இந்தப் பிரேரணை நிறைவேற்றப் பட்டபோதும் பிரேரணைக்கு எதிராக வாக்காளித்த மற்றும் வாக்களிப்பில் நடுநிலைவகித்த நாடுகளைப் பார்க்கும்போது இந்தப் பிரேரணையை பெரும்பாலான உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லையென்பது தெளிவாகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் ஜெனீவா பிரேரணைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் மற்றும் நடுநிலை வகித்த நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவிப்பதுடன், இந்த நாடுகளின் நட்புக் கரங்களை மேலும் வலுவாகப் பற்றிக்கொண்டு முன்செல்லவுள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரேரணைக்கு எதிராகவும், நடுநிலைவகித்த நாடுகளை நோக்கும் போது இந்தப் பிரேரணையை உலகின் பெரும்பாலான நாடுகள் நிராகரித்துள்ளமை தெளிவாகப் புலனாகிறது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் முடிவுகள் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நேற்று விசேட அறிக்கை யொன்றை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் 25வது அமர்வில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் சில முக்கியமான இடத்தைவகித்து இலங்கைக்கு எதிரான மனித உரிமைப் பிரேரணையை நிறைவேற்றிக் கொண்டுள்ளன. இந்தப் பிரேரணையை நிறைவேற்றிக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையாக நிராகரிக்கின்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், மூன்று தசாப்தங்கள் நாட்டில் நிலவிய யுத்தத்தை மூன்றே வருட குறுகிய காலத்துக்குள் முடிவுக்குக் கொண்டுவந்து யுத்தத்தினால் அழிவுற்ற நாட்டை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கையில் 1505 முதல் 1948 வரை நாட்டை ஆக்கிரமித்திருந்த வெளிநாட்டு ஏகாதிபத்தியவாதிகள், புலிகள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் என்பன வழங்கிய தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் சில பலமுள்ளவர்களின் குறுகிய அரசியல் நோக்கத்தை அடைந்துகொள்ளும் நோக்கில், மூன்றுவருட காலமாக இத்தகைய பிரேரணைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு அந்த நாடுகள் நடவடிக்கை எடுத்திருந்தன.
நாடு இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்ற சர்வதேச சட்டத்தை மீறியே இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. யுத்தத்துக்கு முகங்கொடுத்த மேலும் பலநாடுகள் உள்ளபோது இலங்கையை மட்டும் குறிவைத்து செயற்பட்டதால், இந்தப் பிரேரணையை அநீதியானதாகவே கொள்ளமுடியும்.
இந்தப் பிரேரணை மூலம் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டுள்ள மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கையைப் பற்றிய தப்பான அபிப்பிராயத்தைக் கொண்ட பாரபட்சமாக செயற்படுகின்ற ஒரு அதிகாரியாகும் என்பது சில காலங்களுக்கு முன்பே உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இத்தகைய பிரேரணையைக் கொண்டுவந்து இதற்கு முன்னிலை வகித்து செயற்பட்ட நாடுகள் இலங்கையை அரசியல் ரீதியாக பலமிழக்கச் செய்வதற்கான நோக்கத்தைக் கொண்டிருந்தால் அந்த நோக்கம் ஒருபோதும் வெற்றிபெறாது என்பதை நாம் உறுதியாகக் கூறிக்கொள்கிறோம்.
இந்த அநீதியான பிரேரணைக்கு எதிரான, எமது மக்கள் கருத்து நாட்டில் மூன்றில் ஒரு வீத மக்கள் பங்கேற்கும் இரு மாகாண சபைகளுக்குமான இன்றைய தேர்தலின் முடிவுகள் உலகுக்கு வெளிப்படுத்தும். அநீதிக்கு எதிராக போராடும்போது சிறியநாடு, பெரியநாடு என்பது முக்கியமில்லை என்ற செய்தியை நாம் நாட்டுக்கும் உலகுக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறோம். எமது நாட்டுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் எமது கட்சி உட்பட சகல முற்போக்கு அணிகளும் ஒன்றி ணைந்து செயற்படுவது உறுதி எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment