மாயமான பின்னரும் மலேசிய விமானம் 4 மணி நேரம் பறந்ததா?? புதிய தகவல்!
மாயமான மலேசிய விமானம், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னரும் 4 மணி நேரம் பறந்ததாக விமான என்ஜின் குறித்து பதிவான தகவல் மூலம் தெரியவந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு கடந்த சனிக்கிழமை அதிகாலை மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. அது சென்ற 2 மணி நேரத்தில் ரேடார் இணைப்பு துண்டிக்கப்பட்டு திடீரென மாயமானது.
அந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கும் எனவும், அதில் பயணம் செய்தவர்கள் பலியாகி இருக்கக்கூடும் எனவும் செய்திகள் வெளியாகின. இருப்பினும் விமானம் விபத்துக்குள்ளாகி இருந்தால், அதனை நொறுங்கிய பாகங்களாவது கடலிலோ அல்லது வேறு பகுதியிலோ தட்டுப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதுவும் கிடைக்காததால் மர்மம் நீடிக்கிறது.
காணாமல் போன விமானம் விபத்துக்குள்ளானதா அல்லது யாரும் கடத்திச் சென்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்படும் நிலையில், தெற்கு சீன கடல் பகுதியில் மலேசிய கடற்படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இது தவிர மேலும் பல நாடுகளின் கப்பல்களும் பல இடங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், மாயமான விமானம், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னரும் 4 மணி நேரம் பறந்ததாக விமான என்ஜின் குறித்து பதிவான தகவல் மூலம் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த விமானத்தின் என்ஜினின் செயல்பாடுகள் குறித்த விவரம் தாமாகவே பதிவிறக்கம் ( டவுன் லோட்) ஆகி, அதற்கென்று உள்ள டேட்டா சென்டரில் பதிவு ஆகி உள்ளதாகவும், இதன் அடிப்படையிலேயே குறிப்பிட்ட அந்த விமானத்தின் என்ஜின், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த பிறகும், 4 மணி நேரம் பறந்துள்ளது என்பதை உறுதிப்படுத்த முடிவதாகவும் அமெரிக்க விமான போக்குவரத்து புலனாய்வு மற்றும் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் அந்த விமானம் ரேடார் கண்களுக்கு சிக்காத பாதை வழியாக எங்கோ ஒரு மறைவிடத்திற்கு கடத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும், வரும் நாட்களில் வேறு ஏதாவது திட்டத்திற்கு இந்த விமானத்தை பயன்படுத்த அதனை கடத்தியவர்கள் திட்டமிட்டிருக்க வாய்ப்பிருக்கலாம் என்றும் அமெரிக்க விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே அமெரிக்க விமான போக்குவரத்து புலனாய்வாளர்களின் இந்த தகவலை மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ஹிஷாமுதீன் {ஹசேன் மறுத்துள்ளார். இந்த தகவலில் உண்மையில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும் விமானம் மாயமானது தொடர்பாக மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும், அமெரிக்கா மற்றும் சீனாவுடன் ரேடார் பதிவுகளை பகிர்ந்துகொள்வது உள்பட விமானத்தை கண்டுபிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்
3 comments :
4 மணி நேரம் பறந்துள்ளது என்றால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைக்கு கடத்தி செல்ல பட வாய்ப்புள்ளது.
Irukkalam.
idu kooda amerikkavukku theriyada?
Post a Comment