16 - 18 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்களை படுகொலை செய்ய உத்தரவிட்டவர்கள் மனித உரிமை பற்றி பேசுவதில் என்ன நியாயமுள்ளது
அக்காலத்தில் 16 வயதிற்கும் பதினெட்டு வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்களை படுகொலை செய்ய உத்தரவிட்டவர்கள் மனித உரிமை பற்றி பேசுவதில் என்ன நியாயமுள்ளது எனவும் ஜனாதிபதி கேள்வியெழுப்பினார். தலதா மாளிகைக்கு முன்பாகவே தூக்கு மேடை அமைத்து இழுக்கை ஏற்படுத்தியவர்கள் இப்போது மனித உரிமை என்றும் மத நல்லிணக்கம் என்றும் எம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர். இதில் என்ன நியாயமிருக்கிறது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று கேள்வி எழுப்பினார்.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப் பட்டுள்ளோரின் கல்வி மேம்பாட்டுக்கான முதலாவது பாடசாலை நேற்றைய தினம் வட்டரெக்க பானலுவ திறந்தவெளி முகாமில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்- பௌத்த மதத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் கண்டி தலதா மாளிகைக்கு அருகில் தூக்கு மேடை அமைத்தவர்களே இப்போது மனித உரிமை சம்பந்தமாகவும் சமய நல்லிணக்கம் சம்பந்தமாகவும் எம்மிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் 1940 களில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் மற்றும் அவை சம்பந்தமான சட்ட விடயங்களில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார்.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து மேற்படி பாடசாலையை நிர்மாணித்துள்ளதுடன் அரசாங்கம் இதற்கென 20 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. முதற்கட்டமாக க. பொ. த. சாதாரண தரம் வரையும் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் இரண்டாம் கட்டமாக க. பொ. த. சா.த., உயர்தரம் அதனையடுத்து திறனபிவிருத்தி தொழில் பயிற்சிகளும் இதனூடாக சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படவுள்ளன.
நேற்றைய தினம் மேற்படி பாடசாலையை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்த ஜனாதிபதி பாடசாலையின் வகுப்பறைகளை நேரில் பார்வையிட்டார். பாடசாலையின் வசதிகள் மற்றும் விடயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார். முதற் கட்டமாக 120 மாணவர்கள் இங்கு கல்வி பயில உள்ளனர்.
அமைச்சர்கள் பந்துல குணவர்தன, சந்ரசிறி கஜதீர உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி :-சிறைக் கைதிகளாக உள்ள இளம் பராயத்தினருக்கு கல்வியைப் பெற்றுக் கொடுக்க வசதியாக நாட்டில் முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இது நாட்டிற்கு மட்டுமன்றி முழு உலகிற்குமான முன்னுதாரணமாகும்.
இங்குள்ள சிறார்களான கைதிகளோடு நான் கலந்துரையாடியபோது மிகவும் சிறு சிறு குற்றங்களுக்காக இவர்கள் நீதிமன்றத் தீர்ப்புக்கமைய தண்டனை அனுபவிப்பவர்கள். இதனை நோக்கும்போது 1940 காலங்களில் கொண்டுவரப்பட்ட இத்தகைய சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படுவது பற்றி மீள சிந்திக்க வேண்டியுள்ளது.
சிறைக் கைதிகளை அடைத்து வைத்து அவர்களுக்குத் தண்டனை வழங்குவதை விடுத்து சிறைச்சாலைகளை புனர்வாழ்வு நிலையங்களாக மாற்றி அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பது பற்றி நான் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளேன். இப்போது பல குற்றங்கள் சிறைச்சாலைக்குள்ளும் நடைபெறுவதைக் காண முடிகின்றது.
சிறைச்சாலைகளில் இருப்போர் சமூகத்தைப் பற்றி அறியவும் அவர்கள் சிறந்த கல்வியைப் பெற்று சமூகத்தில் சிறந்த பிரஜையாக உருவாவதற்கும் இந்த பாடசாலை உறுதுணையாக அமையும். இவர்களுக்கு இப்பாடசாலையில் கணனி தொழில் நுட்பம் மொழி பயிற்சியும் வழங்கப்படுகின்றன. சர்வதேச மொழியும் இவர்களுக்குப் பயிற்றப்பட்டால் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கு இவர்களுக்கு வாய்ப்பு கிட்டும்.
வாழ்க்கைக்கான தொழிலே இவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்ததாக அமைய முடியும். நான் தொழில் பயிற்சி அமைச்சராக அறிமுகப்படுத்திய திட்டங்கள் இப்போது பாடசாலைகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
எம்மைப் படுகொலை செய்தவர்களான பயங்கரவாதிகளையும் வெடிகுண்டு வைத்து ஆயுதங்களை ஏந்தி படுகொலை கலாசாரத்தில் ஈடுபட்டவர்களையும் நாம் மன்னித்து புனர்வாழ்வளித்து சமூகத்தோடு இணைத்துள்ளோம். சமூகத்தோடு உள்ள நம்பிக்கை காரணமாக அத்தகைய பாரிய சவாலை துணிவுடன் ஏற்று நாம் செயற்பட்டோம்.
இதேபோன்று சிறு குற்றங்களுக்காக தண்டனைகளை அனுபவித்து வரும் எமது சகோதரர்கள் தொடர்பில் நாம் சற்று பரந்து சிந்திக்க வேண்டியுள்ளது. சிறைக் கைதிகளுக்கான பாடசாலை பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி, இப்பாடசாலையில் கற்பவர்கள் சொந்தக் காலில் நின்று தொழில் செய்து முன்னேற வேண்டும். அதற்கு இந்த பாடசாலை வழிவகுக்கும். இங்குள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடம் சர்வதேசம் பற்றி அறியவும் ஏனைய நல்ல பலவிடயங்களை தெரிந்துகொள்ளவும் வாழ்க்கையில் முன்னேறவும் உதவும். இங்குள்ள அதிகாரிகளும் இதன் மூலம் பயன்பெற முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment