Saturday, February 22, 2014

வவுனியாவில் சில்மிசம் செய்த கிராம அலுவலரை காப்பாற்ற துடிக்கும் அரச அதிகாரிகள் (video)

வவுனியா பம்பைமடு, கல்மடு, செக்கட்டிப்புலவு ஆகிய மூன்று பிரிவுகளையும் நிர்வகித்து வந்த கிராம அலுவலர் எஸ்.சிறிகாந்தன் இந்தியன் வீட்டுத் திட்டத்தினைப் பெறவும், வடக்கின் வசந்தத்தின் கீழான இலவச மின் இணைப்பைப் பெறவும், குடும்ப பதிவு அட்டைகளை புதிப்பிக்கவும் லஞ்சம் கோரி வந்த அதேவேளை அவற்றை வழங்க வசதியில்லாத பெண்களைக் கொண்ட குடும்பங்களிடமும் பாலியல் லஞ்சமும் கோரியிருந்தார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கிராமங்கள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் தெரிவித்த போதும், முதலில் முறைப்பாடு செய்த செக்கட்டிப்புலவு தவிர்ந்த ஏனைய பகுதி மக்களின் முறைப்பாடுகளை விசாரணை அதிகாரிகள் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

பம்பைமடு கிராம அலுவலரை தற்போது புதிதாக நியமித்துள்ள அதேவேளை சிறிகாந்தன் அவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்த கிராமத்தில் இருந்து அவரை மாற்றாது உள்ளமை பல வகையிலும் சந்தேகம் ஏற்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

தனது அரசியல் செல்வாக்கு காரணமாக இப் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க அவருக்கு மாவட்ட உயர்நிலை அரச அதிகாரிகள் உட்பட பலர் உதவி செய்து வருவதாகவும் அறிய முடிகிறது.

எமது இணையம் இது தொடர்பான செய்திகளை ஏற்கனவே வெளிப்படுத்தி இருந்தது. அதற்கான ஆதாரங்களை விசாரணை இடம்பெற்றமையால் உடனடியாக வெளியிடவில்லை. ஆனால் தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சார்பாக செயற்படாது பக்க சார்பாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் சிலர் செயற்படுவதனால் எமது மக்கள் சார் பிரச்சனைகளை வெளிக் கொண்டு வந்து அவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஊ;டகம் என்ற வகையில் எமக்கும் உள்ளது.

இதனால் எமக்கு கிடைக்கப்பெற்ற ஆவணங்களை தொடர்ச்சியாக எமது இணையம் வெளிப்படுத்தும். உண்மையை சூடிமறைத்து காப்பாற்ற முனையும் அரச அதிகாரிகளின் குடும்பங்கள், பிள்ளைகள், உறவினர்கள் என யாருக்காவது இப்படி பிரச்சனை நடந்தால் இவர்கள் இப்படியா தொடர்ந்தும் இருப்பார்கள் என எமது இணையம் சந்தேகம் அடைகிறது.

ஆதாரம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இப் பிரச்சனை தொடர்பாக ஏதாவது ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றால் எமது இணையத்தள முகவரிக்கு இமெயில் மூலம் அனுப்பி உதவுங்கள்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com