போதைப்பொருள் கும்பல் தலைவனைப் பிடித்தது எப்படி?: ஆளில்லா உளவு விமானம் மூலம் கண்காணித்ததாக அமெரிக்கா தகவல்!
வட அமெரிக்க நாடான மெக்ஸிகோ வின் பிரபல போதை மருந்து கடத்தல் மன்னன் கஸ்மேனைப் பிடிக்க ஆளில்லா உளவு விமானம், தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்பு, மெக்ஸிகோவின் உயர் கடற்படைப் பிரிவு ஆகியவற்றைப் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெக்ஸிகோவிலிருந்து செயல்பட்ட ஜாக்குயின் எல் சாப்போ கஸ்மேன் (56) உலகின் மிகப்பிரபலமான போதைமருந்து கடத்தல் கும்பலின் தலைவர். அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் போதைப்பொருளை விநியோகித்து வந்தார். அமெரிக்காவில் நடை பெறும் சட்டவிரோத போதைமருந்து விற்பனையில் 25 சதவீதம் இவரின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்று வந்தது.
இவர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். கஸ்மேனின் கைது, வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது. கஸ்மேனைப் பிடித்தது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறிய தாவது: ரிமோட் மூலம் இயங் கும் ஆளில்லா கண்காணிப்பு விமானம், ஜனவரி மாதத்தின் பிற்பகுதியிலிருந்து பிப்ரவரி மாத பிற்பகுதி வரை கஸ்மேனின் நடமாட்டைத் கண்காணித்தது. இந்த விமானத்தை இயக்க மெக்ஸிகோ ராணுவம் ஒப்புதல் அளித்திருந்தது.
இக்கண்காணிப்பின் மூலம் கஸ்மேன், மெக்ஸிகோ சினலோவா மாகாணத் தலைநகர் குலியாகனில் இருப்பது தெரியவந்தது. கஸ்மேன் குலியாகனில் தன் ரகசிய பதுங்கு வீடுகளில் ஒன்றில் தங்கியிருந்தார்.
அந்த வீடுகள் மிகத் தடிமனமான சுவரால் கட்டப்பட்டிருந்தன. அனைத்து வீடுகளிலும் ரகசிய சுரங்க வழிகள் உள்ளன. கதவு கள் உறுதியான எஃகால் ஆனவையாக இருந்தன. இந்த நகரத்தில்தான் அவரின் துணைவி மற்றும் நெருங்கிய வட்டாரத்தினர் இருந்தனர். அவரின் தொலைபேசி உரையாடல்கள் இடைமறித்து ஒட்டுக் கேட்கப்பட்டன. இன்னும் மூன்று தினங்களில் அவர் மஸாட்லான் பகுதிக்குத் தப்பிச் செல்லவிருந்தார். அதற்கு முன்பாக அவர் கைது செய்யப்பட்டார்.
ஒரு மாதமாகத் திட்டமிட்டு கண்காணித்து கஸ்மேன் கைது செய்யப்பட்டுள்ளார். உலகின் மிகத் தேடப்படும் குற்றவாளிகளுள் ஒருவரான கஸ்மேனைத் தொடர்ந்து மேலும் 13க்கும் மேற்பட்ட போதைப்பொருள் கடத்தல் காரர்களும் கைது செய்யப்பட்டனர்.
கஸ்மேன் மிக சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அவருக்கு காவல் துறையினர் சிலரும் உதவி செய்து வந்துள்ளனர். பணத்தை ஏரளமாகச் செலவழித்து அரசியல் ரீதியாகவும் மறைமுக ஆதரவை அவர் பெற்றிருந்தார்.
கஸ்மேனுக்குச் சொந்தமாக 16 வீடுகள் 4 பண்ணை வீடுகள், 46-க் கும் மேற்பட்ட சொகுசு கார்கள் உள்ளன. ஏராளமான ஆயுதங் களையும் அவர் வைத்திருந்தார். இவற்றில் பெரும்பாலானவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
13 ஆண்டுகளாக தலைமறைவு
கடந்த 13 ஆண்டுகளாக கஸ் மேன் தேடப்பட்டு வருகிறார். கஸ்மேன் மீது நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்க நகரங்களில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்தும்படி, அமெரிக்க அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவுக்கு நாடுகடத்தும் நடவடிக்கைக்கு தடைவிதிக்கக் கோரும் மனுவை, கஸ்மேனின் வழக்கறிஞர்கள் மெக்ஸிகோ நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்பதா இல்லையா என்பது குறித்து மெக்ஸிகோ இன்னும் முடிவு செய்யவில்லை.
இது தொடர்பாக மெக்ஸிகோ தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு நிபுணர் ரௌல் பெனிடஸ் மானட் கூறுகையில், “நாடுகடத்தும் நடவடிக்கைக்கு கஸ்மேன் தடை விதிக்கக் கோருவது அவர் தொடர்ந்து மெக்ஸிகோவில் இருப்பதற்காகவே. அவர் வழக்கைத் தாமதப்படுத்த முயற்சி செய்கிறார். நாடுகடத்தும் நடவடிக்கைக்கு நீண்ட காலம் பிடிக்கும்.
அவர் மெக்ஸிகோ நீதிமன்றத்தில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு, தண்டனை பெற்ற பிறகே, நாடுகடத்த முடியும். நீதிமன்றத்தின் தண்டனை அறிவிப்பு வெளியான பிறகே, அவரை உடனடியாக நாடுகடத்துவதா அல்லது மெக்ஸிகோ சிறையில் அடைப்பதா என்பது குறித்து முடிவு செய்ய முடியும்” என்றார்.
கஸ்மேனுக்கு மெக்ஸிகோ நீதிமன்றம் ஏற்கெனவே ஒரு வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்திருந்தது. 8 ஆண்டுகள் சிறையிலிருந்த கஸ்மேன் அங்கிருந்து தப்பினார். ஆகவே, அந்த சிறை தண்டனையை முடிக்க இன்னும் 12 ஆண்டுகள் அவர் சிறையிலிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment