Friday, February 28, 2014

எச்சரிக்கை: யாழில் காசோலை மோசடி அதிகரிப்பு!

யாழில் கடந்த காலங்களை விட தற்போது காசோலை மோசடிகள் அதிகரித்துள்ளதாகவும் அது தொடர்பாக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் யாழ். பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் அமரசேகர பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று (28) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் அவ்வாறு கேட்டு கொண்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். பொலிஸ் பிரிவுக்கு வரும் அநேகமான முறைப்பாடுகள் காசோலை மோசடி தொடர்பாகவே வருகின்றன. இவை கடந்த காலங்களை விட தற்போது அதிகரித்துள்ளன.

சட்ட விரோதமாக சீட்டு பிடிப்பவர்கள் மற்றும் அதிகரித்த வட்டிக்கு கொடுப்பவர்களுமே இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

காசோலை மோசடி தொடர்பான முறைப்பாடுகள் பொலிஸ் நிலையத்திற்கு வந்து அவை நீதிமன்றம் செல்லும் போது சில வேளைகளில் நீதிமன்றில் முறைப்பாட்டாளர்களுக்கு எதிராகவும் வழக்குகள் திரும்பியுள்ளன.

ஏனெனில் அவர்கள் பொலிஸ் முறைப்பாடு செய்யும் போது வியாபார நோக்குக்காக தான் காசோலை கொடுத்ததாக முறைப்பாட்டை பதிவு செய்வார்கள்

பின்னர் நீதிமன்ற விசாரணைகளின் போதே இவர்கள் அதிகரித்த வட்டிக்கு காசோலை மாறியதாக தெரியவந்து, அவர்களுக்கு எதிராக வழக்குகள் திரும்பிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

எனவே பொதுமக்கள் வட்டிக்கு பணம் கொடுக்கவோ வாங்கோவோ வேண்டாம். பணத்தேவைகளுக்கு வங்கிகளை நாடுங்கள் அல்லது அரசாங்கத்திற்கு வரிப்பணம் உரிய முறையில் கட்டி பதிவு செய்தவர்களுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளுங்கள் அதன் மூலமே மோசடிகளை தவிர்த்து கொள்ளலாம் என மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment