Friday, February 21, 2014

ராஜீவ் கொலை வழக்கில் என் கடமை முடிந்துவிட்டது!- சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் துப்புதுலக்கி குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தவர் முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன். கோயமுத்தூர் நரசீபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தற்போது அமைதி, நல்லாட்சி, மத ஒருமைப்பாடு இயக்கம் (foundation for good governance) என்ற அமைப்பை நடத்தி நாட்டில் விவசாயிகள் பிரச்சினை, அவர்களுக்கான விழிப்புணர்வு, மனித ஒற்றுமை, சமூக, மத நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் நடக்கும் இயக்கங்களில் பங்கெடுத்து வருகிறார்.

டெல்லியில் இருந்த அவரிடம் ராஜீவ் காந்தி கொலை வழக்கு சிறைவாசிகளின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது குறித்தும், அது குறித்து தமிழக சட்டப்பேரவையில் விவாதித்து கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவித்திருந்தது குறித்தும் `தி இந்து'வுக்காக தொலைபேசி வாயிலாக அவர் அளித்த பேட்டி:

ராஜீவ் கொலையில் 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருப்பது குறித்து உங்களின் கருத்து என்ன?

அந்த வழக்கில் என் கடமை எப்போதோ முடிந்துவிட்டது. ஒரு மர்மமான மரணம் ராஜீவ் மரணம். யார் கொலை செய்தார்கள் என்பது யாருக்குமே தெரியாது. அப்போது எதற்காக அதை செய்தார்கள் என்றுகூட யாராலும் யூகிக்க முடியவில்லை. ஐ.பி. எனப்படும் இந்திய நுண்ணறிவு புலனாய்வுத் துறைக்குக்கூட தெரியவில்லை. இந்த கொலை வழக்கு பெரும்பாலும் ஜான் கென்னடி கொலை வழக்குபோல்தான் துப்புகூட கிடைக்காமல் கண்டுபிடிக்க முடியாமல் போகப்போகிறது என்று புலனாய்வுத்துறை உட்பட பலரும் கருதினர்.

அந்த சூழ்நிலையில்தான் அந்த வழக்கில் துப்பு துலக்க முடியுமா? என்று என்னை அழைத்துக் கேட்டனர். நானும் ஒப்புக்கொண்டு சென்னை வந்தேன்.

ஒரு நாளைக்கு 20 மணி நேரம் இரவு பகல் பாராமல் சரியான தூக்கமில்லாமல், விடுமுறை என்று ஒன்றில்லாமல் கிட்டத்தட்ட ஓராண்டாக பல்வேறு விசாரணைகள் நிகழ்த்தி, கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து வழக்குப் போட்டேன். குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தோம். அனைவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வந்தது.குற்றவாளிகள் அப்பீல் போனார்கள். உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளே என் விசாரணையையும், ஆதாரங்களையும் ஒப்புக்கொண்டு 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், 4 பேருக்கு தூக்கு தண்டனையும் அளித்தனர்.

பின்னர் அதில் நளினி என்பவரின் தூக்கு தண்டனை கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாகக் குறைத்தனர். மீதி 3 பேருக்கு கருணை மனு 11 ஆண்டுகள் நிலுவையில் இருந்த நிலையில், இவர்கள் இத்தனை ஆண்டுகாலம் சிறையில் இருப்பது மனித உரிமைக்கு மீறிய செயல் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து அவர்கள் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளது.

என்னைப் பொறுத்தவரை துப்பே இல்லாத ஒரு வழக்கில் துப்பு துலக்கி ஏராளமான ஆதாரங்களை சமர்ப்பித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்ததோடு என் கடமை முடிந்துவிட்டது.

ராஜீவ் காந்தி உங்களுடைய நெருக்கமான நண்பர். அவர் இப்போது இருந்திருந்தால் நாடு எப்படி இருந்திருக்கும் என்று கருதுகிறீர்கள்?

நிச்சயமாக நன்றாக சிறப்பாக இருந்திருக்கும். நாட்டின் மதிப்பையும், தரத்தையும் உலக அரங்கில் மிக பன்மடங்கு உயர்த்தியிருப்பார். மக்களின் அன்பையும், மதிப்பையும் பெற்ற தலைவரான அவர் நல்ல உள்ளம் கொண்டவர். மக்கள் அவரை நேசித்ததைவிட மக்களை அவர் நேசித்தார் என்றுதான் சொல்லுவேன். அவர் ஆட்சியில் சில சின்ன தவறுகள் நடந்திருக்கலாம். மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்திருந்தால் அந்த சிறுதவறுகளைகூட கலைந்து தவறுகளுக்கே இடம் கொடாத ஆட்சி செய்திருப்பார். இந்த மாதிரி நிலையற்ற, திறனற்ற அரசாங்கமாக அது நிச்சயமாக இருந்திருக்காது.

3 பேருக்கான தூக்கு தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டதை தமிழக சட்டப்பேரவையிலேயே விவாதப் பொருளாக்கி அவர்கள் 3 பேரையும் சில நாட்களில் விடுதலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறாரே முதல்வர் ஜெயலலிதா?

எந்த விஷயத்தையும் நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் விவாதிக்கலாம். முடிவு எடுக்கலாம். அதில் கருத்து சொல்ல என்ன இருக்கு?

No comments:

Post a Comment