பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்கும்போது இராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு இடமில்லை...!
தெற்கு இராணுவத்தினரின் குடும்பங்களிலிருந்து முறைப்பாடு!
பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்கும்போது,அரச பாதுகாப்புப் பிரிவுகளில் கடமையாற்றுகின்ற ஓய்வுபெற்ற வலது குறைந்த இராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு வழங்கப்படுகின்ற விசேட சலுகை ஏதும் வழங்கப்படவில்லை என இராணுவ குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் ஆசிரியர் சங்கத்திற்கு முறைப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிடுகின்றது.
இலங்கை இராணுவம், வான் படை, கடற்படை மற்றும் பொலிஸ் திணைக்களங்களில் சேவை புரிகின்ற இராணுவத்தினரது பிள்ளைகளுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என கல்வியமைச்சுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வேண்டுகோளை கல்வித் திணைக்களம் ஏற்றுக்கொண்டு சுற்றநிரூபத்திலும் இணைத்துள்ளது.
ஆயினும், தெற்கிலுள்ள சில பாடசாலை உயரதிகாரிகள் அந்தப் பிள்ளைகள் விடயத்தில் கவனயீனமாக நடந்துகொள்வதாகவும், இது பெரும் பிரச்சினையாக உருவெடுப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கிறார்.
தென் மாகாணத்திலுள்ள நகர்ப்புற பிரபல பாடசாலைகள் பலவற்றில் இவ்வாறான அநீதி நிகழ்ந்துள்ளது எனவும் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை போன்ற நகர்ப்புற பாடசாலைகள் இதில் முன்னணி வகிப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிடுகிறது.
தங்களது பிள்ளைகளை பாடசாலைக்குச் சேர்த்துக் கொள்வதற்கு ரூபா 5000 இலிருந்து ரூபா ஒரு இலட்சம் வரை பாடசாலைகளுக்குச் செலுத்த வேண்டிய கட்டாயப்பாடு தங்களுக்கு நேர்ந்துள்ளதாக பாதிக்கப்பட்ட இராணுவத்தைச் சேர்ந்த பெற்றோர், அரச பாதுகாப்பு செயலாளருக்கும், கல்வியமைச்சின் செயலாளருக்கும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் முறைப்பட்டுள்ளனர்.
கல்வியமைச்சின் சுற்றுநிரூபத்தில், பாடசாலைகளுக்கு மாணவர்கள் உள்வாங்கப்படும்போது வசதிக்கட்டணம், சேவைக்கட்டணம், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தில் அங்கத்துவம் பெறுவதற்கான கட்டணம் தவிர வேறு எந்தவொரு வகையிலும் (பொருளாகவோ, பணமாகவோ) பெற்றுக் கொள்வதும், பாடசாலை சார்ந்த பிற சங்கங்கள் கூட அவ்வாறு கட்டணம் அறவிடுவது தடை எனவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான பாடசாலைகளின் உயரதிகாரிகள் பாடசாலைகளை கட்டியெழுப்பும் திட்டத்துடன்கூடிய 2008/35 சுற்றுநிரூபத்திற்குள் ஒழிந்துகொண்டு, அப்பாவிப் பெற்றோரின், இராணுவத்தினரின் பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர்.
தென்மாகாண கல்விப் பணிப்பாளர் ஜெயதிஸ்ஸ புளொக் இதுபற்றிக் குறிப்பிடும்போது, அவ்வாறான விடயங்கள் பற்றி வெகுவிரைவில் ஆராயப்படும் எனவும், அதற்கெதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இராணுவத்தினரின் பிள்ளைகள் விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் உடனடியாக தனக்குத் தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment