Monday, February 24, 2014

ஆளும் கட்சி வெற்றி (இ)லைக் கட்சியல்ல வெறும் இலைக் கட்சியே! - சாண் நவாஸ்

தென் மாகாண சபைத் தேர்தலில் - மாத்தறை மாவட்டத்திலிருந்து போட்டியிடுகின்ற ஒரேயொரு தமிழ்பேசும் அபேட்சகர் வெலிகமையைச் சேர்ந்த சாண் நவாஸ் அவர்கள். அவர், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து போட்டியிடுகின்றார். அவரை இலங்கைநெற்றுக்காக நேர்கண்டோம்.

நேர்கண்டவர் - கலைமகன் பைரூஸ்

கேள்வி : தென்மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்திலிருந்து தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்.. தங்களை வெலிகமை மக்களுக்குக்கூட சரியாகத்தெரியாது என்று குற்றச்சாட்டு நிலவுகிறது.. தாங்கள் இதுபற்றி என்ன சொல்லவிரும்புகிறீர்கள்?

பதில்: இது எனக்கு மட்டுமல்ல, இது எனக்கு மட்டுமல்ல சகல வேட்பாளர்களுக்கும் வரக்கூடிய குற்றச்சாட்டு…அது சில நேரம் காழ்ப்புணர்ச்சியாக இருக்கும். எந்தவொரு அரசியல்வாதியேனும் அரசியலில் குதித்தால் அவரைத் தெரியாது.. அவரைத் தெரியாது என்று குக்குரலிடுவார்கள்…
நாங்கள் இந்த வெலிகமையில் நான்கு பரம்பரையாக இருக்கின்றோம். எங்களைத் தெரியாத யாரும் கிடையாது. புதிதாக வந்தவர்களுக்கு எங்களைத் தெரியாதது சாதாரண விடயம்… பரம்பரையாக இருந்தவர்களுக்கோ.. தொடர்ந்து 30 வருடங்களுக்கு முற்பட்டவர்களுக்கோ எங்களைத் தெரியாமல் இருக்க நியாயமில்லை. நீங்கள் சொல்வது போலத் தெரியாது என்பவர்களுக்கு தெரியாமல் இல்லை.. தெரியும்.. அரசியல் என்று வருகின்றபோது இவ்வாறான குற்றச்சாட்டுக்களை அவர்களாக வலிந்து முன்வைக்கிறார்கள்.. இது சாதாரண விடயம்.

கேள்வி : தாங்கள் முகநூல் வாயிலாக சாண் நவாஸ் என்ற பெயரிலேயே வலம் வருகிறீர்கள்.. விடயங்களைப் பகிர்கிறீர்கள்.. வெலிகமை வாழ் முஸ்லிம்களுக்கு குறிப்பாக மாத்தறை மாவட்ட முஸ்லிம்களுக்கு சாண் நவாஸ் என்ற ஒருவரைப் பற்றித் தெரியாது என்றும்.. அவரது ஊர் எது என்றும் வினா தொடுக்கிறார்கள்…

சிங்களப் பெயர்போல உள்ள இந்தப் பெயர் உங்கள் உண்மைப் பெயர்தானா? அல்லது இதில் ஏதேனும் சூட்சுமங்கள் உள்ளனவா?

பதில்: எனது சொந்தப் பெயர் இம்திஸான் நவாஸ். இங்குள்ள முஸ்லிம்களின் தொகை 15000. வெலிகம தொகுதியை எடுத்து நோக்கினால் இங்கு 91500 வாக்காளர்கள். இதில் 8000 வாக்காளர்கள் முஸ்லிம்கள். ஏனையோர் மாற்று இனத்தவர்கள்.

பெரும்பான்மையினராகிய சிங்களவர்களுக்கு முஸ்லிம் பெயராகிய இம்திஸான் நவாஸ் என்பதை உச்சரிப்பது சற்றுக் கடினம். அதனால்தான் சாண் நவாஸ் என்று என்னை அழைத்துக் கொண்டேன்.. பெயருக்கு முக்கியம் கொடுத்தால் போதுந்தானே.. அது சாண் நவாஸ் என்றாலும் ஒன்று.. இல்லை வேறு எப்படிச் சொன்னாலும் ஒன்று.. அழைப்புக்குத்தானே நாம் பதில் கொடுக்க வேண்டும்.

கேள்வி: தங்களைப் பற்றி எதுவுமே தெரியாது என்று குற்றச்சாட்டு முன்வைத்துள்ள வாக்காளர்களுக்கு தங்களைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா?

பதில்: நான் 1999 இல் எனது மாமா நிஸாம் புஷிர்தீன் தேர்தலில் களம் குதிக்கும்போதே நானும் தேர்தலில் கால் பதித்தேன். அன்றிலிருந்து நான் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவராக இருக்கிறேன்.

கேள்வி: நீங்கள் தென்மாகாணம், மாத்தறை மாவட்டத்திலிருந்து ஒரேயொரு தமிழ் பேசும் வேட்பாளராக இருக்கின்றீர்கள்.. இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: கண்டிப்பாக இத்தேர்தலில் வெற்றிபெறும் என்ற திடநம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இந்த அரசாங்கத்தின்மீது இருந்த நம்பிக்கை எல்லோருக்கும் இல்லாமலாகிவிட்டது. தனியாக சிறுசிறு கட்சிகளால் வெற்றிபெற முடியாது போனாலும், சிறுகட்சிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து இத்தேர்தலில் கூட்டணியாகி ஐக்கிய தேசியக் கட்சியை முதன்மையடையச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கேள்வி: ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளிடத்தில் பனிப்போர் நிலவுகிறது… தலைமைத்துவத்திற்காக ஆளுக்காள் கொள்கைப் பிரிவில் இருக்கிறார்கள். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர ஐக்கிய தேசியக் கட்சி இத்தேர்தலில் வெற்றி பெறவே மாட்டாது என்று கூறியிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதே.. இதுதொடர்பில் தாங்கள் என்ன சொல்லவிரும்புகிறீர்கள்?

பதில்: மங்கள சமரவீர எதனை அடிப்படையாக வைத்து இதனைக் கூறினார் என எனக்குத் தெரியவில்லை. இதைப்பற்றி அறிந்ததன் பின்னரே என்னால்இந்த கேள்விக்கு விடையளிக்க முடியும்.

கேள்வி: தங்களுக்கு மேலிடத்து விடயங்கள் எதுவும் தெரியாது என்று சொல்கிறீர்கள்… ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து போட்டியிடுகிறீர்கள்… அப்போது அரசியலில் குதிக்கும் தாங்கள் தானுண்டு, தன்பாடுண்டு என்று நின்றுவிடுவீர்களா? வாக்காளர்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள்?

பதில்: நான் தேர்தல் அலுவலாக கொஞ்சம் நாட்களாக அங்குமிங்கும் ஓடியாடித் திரிவதால் சரியாக செய்திகள்கூட என்னால் வாசிக்கமுடியவில்லை. மங்கள சமரவீர எதற்காக, எந்த யூகத்தில் அப்படிச் சொன்னார் என்று எனக்கு எதுவும் தெரியாது என்று மீண்டும் நான் சொல்கிறேன்.

தென் மாகாண சபையிலுள்ள 7 ஆசனங்களையும் ஐதேக பெறுவதற்காக நான் என்னலான அனைத்துவிடயங்களை வெகுசீக்கிரம் ஆரம்பிக்கவுள்ளேன். முதலாவது எனது ஊரிலிருந்து நான் பயணத்தை ஆரம்பிக்கிறேன். சகல இடங்களுக்கும் சென்று தற்போதைய நிலைபற்றி குரல் கொடுப்பேன். என் குரல் இறைவன் துணையால் நீண்டு ஒலிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கேள்வி: அண்மையில் நடந்த பெரும்பாலான பிரதேச சபை வரவு - செலவுத் திட்டங்களிலும் ஆளும் கட்சி தோல்வியைத் தழுவியே வந்துள்ளது. இதனை அடிப்படையாக வைத்து, ஐக்கிய தேசியக் கட்சி குறைந்தளவு மாத்தறை மாவட்டத்திலேனும் வெற்றியைத் தழுவும் என்று தாங்கள் கருதுகின்றீர்களா?

பதில் : ஆளுங்கட்சியினருக்கு எந்தவகையிலும் இரசகிய வாக்கெடுப்பு நடாத்த முடியாது. காரணம் அரசாங்கத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் அரசியல்வாதிகளே அல்ல. எல்லோரும் அரசியல் வியாபாரிகள். இவர்கள் தங்களது வயிறு வளர்ப்பதற்காகவே ஆளுங்கட்சியினருடன் இருக்கிறார்கள். அது வெற்றி இலை அல்ல.. வெற்று இலை. இவர்களுக்கு கட்சியின் மீது எவ்வித அக்கறையும் கிடையவே கிடையாது.

மக்கள் படுகின்ற இன்னல்கள், அவர்களது வாழ்க்கைச் செலவு வீத அதிகரிப்பு, அரசாங்கத்தின் தான்தோன்றித்தன போக்கு, மன்னர் ஆட்சிமுறை போன்றவற்றினால் நிச்சயம் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டும்.. எங்களுக்கு நிச்சயம் வாக்குகள் வந்து குவியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

எங்கள் கட்சி அன்று செய்த திட்டங்களுக்கும்.. அரசாங்கம் இன்று மேற்கொள்கின்ற திட்டங்களும் வானும் பூமியும்போல… நாங்கள் தொடங்கியவற்றை இவர்கள் வழிநடாத்திச் செல்கிறார்கள். இவர்கள் ஒன்று செய்தார்கள் நாங்கள் ஆரம்பித்த தொழிற்சாலைகளை இவர்கள் இழுத்து மூடினார்கள்.

கேள்வி: இன்று பாதைகள் அமைப்பதும், நலனோம்பு விடயங்களை மேற்கொள்வதும் அரசாங்கமே… ஆளுங்கட்சியில் ஆட்சிபீடத்தில் இருப்பவர்கள் ஒரு குடும்ப அங்கத்தவர்கள் என்ற கருத்து அவர்கள் மீது குற்றச்சாட்டாக சுமத்தப்படுகிறது.. இருந்தபோதும், மாத்தறை மாவட்டத்திலிருந்து ஐதேகவிலிருந்து தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரே ஒரு தமிழ் பேசும் அபேட்சகராகிய தாங்கள் வெற்றிபெற்றால்…?

பதில்: சாதிப்பது ஒருபுறம் இருக்க… குறைந்தது மாகாண சபையில் என்ன நடக்கிறது என்பது பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 1999 இலிருந்து தமிழ்பேசும் ஒரு முஸ்லிம் உறுப்பினர் கூட மாத்தறை மாவட்டத்திலிருந்து மாகாண சபை உறுப்பினராக இல்லை. குறிப்பாக தமிழ்பேசும் மக்கள் அண்ணளவாக 32000 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு மாகாண சபையில் நடப்பது என்னவென்று கூடத் தெரியாது. அந்த 32000 பேருக்கும் பாராளுமன்றம் செல்வதற்குத் தகுதியும் இல்லை. நான் தேர்தல் களத்தில் இறங்கியிருப்பது முழுமையாக தமிழ்பேசும் வாக்காளர்களின் வாக்குகளை நம்பியே. வாக்காளர்கள் அனைவரும் தமிழ் பேசும் ஒரே ஒரு வேட்பாளர் என்பதைக் கருத்திற் கொண்டு வாக்களித்தால் நிச்சயமாக மாகாண சபை உறுப்பினராகச் செல்லலாம். அந்த வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக அமைந்தால் உச்சகட்டமாக மாகாண சபைக்குச் செல்லலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நிச்சயமாக நான் தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுப்பேன். விசேடமாக தெனியாய போன்ற தோட்டப் பகுதிகளில் கல்வி, கலை, கலாசாரம் எல்லாமே சீர்குலைந்திருக்கின்றது. கொட்டப்பொலவில் மாத்திரம் 4400 தமிழ் வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு தமிழ் பேசும் பிரதேச உறுப்பினர் இல்லை. அவர்களின் குரல்வளை அங்கு நொறுக்கப்பட்டுள்ளது. தந்தை வழி அவர்கள் தோட்டத் தொழிலாளிகளாகவே இருக்கப் போகிறார்கள்.

தமிழ் பேசும் மக்களின் ஒரு குரலாக, ஊடகமாக நிச்சயமாக நானிருப்பேன். இதில் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. கொட்டகலை போன்ற தமிழ் பிரதேசங்களுக்காக தேர்தலின் பின்னரும் நான் முழுமையாக என்னாலான பங்களிப்பை வழங்குவேன். அங்கிருந்து பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பது அவா.

No comments:

Post a Comment