Wednesday, February 26, 2014

மூன்றே நிமிடங்களில் குற்றவாளிகளை இனங்காண்பதற்காக தன்னியக்க கைவிரல் அடையாள முறைமை, நாளை முதல் அறிமுகம்!

குற்றவாளிகளை இனங்காண்பதற்காக தன்னியக்க கைவிரல் அடையாளங்களை பதியும் முறைமை, நாளை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். மூன்றே நிமிடங்களில் விரல் அடையாள அறிக்கைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இவ்வறிக்கையை பெறுவதற்கு 14 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்பட்டது. இது தொடர்பில், பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண கருத்து தெரிவித்தார்.

100 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் விரல் அடையாளங்களை பதிவு செய்யும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை வெற்றுக்கண்ணால் வில்லை யொன்றின் மூலம் நபர் ஒருவரின் கைரேகை மற்றொரு நபரின் கைரேகையுடன் ஒத்துப்போகின்றதா என்பது ஆராயப்பட்டு வந்தது. தற்போது இம்முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது இதற்காக விசேட மென்பொருளொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

80 கோடி ரூபா பெறுமதியான இம்மென்பெருளை ஜப்பானிலிருந்து கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தற்போது கொழும்பு பல்கலைக்கழக கணனி நிபுணர் ஒருவர் இம்மென்பொருளை மிக குறைந்த விலையில் தயாரித்துள்ளார். இம்மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் இதுவரை 3 இலட்சத்து 20 ஆயிரம் குற்றவாளிகளின் விரல் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம் குற்றவாளியொருவரை மூன்றே நிமிடங்களில் இனங்காணலாம். இதற்கு முன்னர் குற்றவாளிகளை அடையாளம் காண 14 நாட்கள் தேவைப்பட்டது. இத்திட்டம் நாளை முதல் அமுல்ப்படுத்தப்படுகிறது. நாளை தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் உள்ள பொலிஸ் வலயத்தில், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் எதிர்வரும் காலங்களில் அனைத்து பணிகளையும் மிக இலகுவாக முன்னெடுக்க முடியும். அத்துடன் துரிதமாக விரல் அடையாளம் தொடர்பான அறிக்கைகளையும் வழங்கலாம்.

No comments:

Post a Comment