மெய்யறிவையும், சிறந்த பண்பையும் மேம்படுத்துகின்ற சிசுதிரிய வேலைத் திட்டம் மாணவர்கள் மத்தியில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற முயற்சியாக ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவால் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
2006 ஆம் ஆண்டு கெபிதிகொல்லாவ கிளேமோர் குண்டு வெடிப்பு துயரியல் சம்பவம் இடம்பெற்றது. இதில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணங்கள், உளவியல் உதவிகள் ஆகியவற்றை வழங்கவே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு இன மற்றும் சமய நல்லிணக்கத்தை நாடு முழுவதிலும் மலரச் செய்வதை பிரதான நோக்கமாக கொண்ட தேசிய அபிவிருத்திக்கு பங்களிக்கின்ற வேலைத் திட்டமாக இது பரிணமித்தது.
சமாதானத்தின் மூலம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது இத்திட்டத்தின் பிரதான இலக்கு ஆகும், இன மற்றும் சமய நல்லிணக்கம் மூலம் நிரந்தர சமாதானம், சமூக அபிவிருத்தி ஆகியவற்றை அடைவதற்கான அம்சங்களை இத்திட்டம் கொண்டு உள்ளது. நிகழ்ச்சிகள், பயிற்சிப் பட்டறைகள் போன்றன நடத்தப்படுகின்றன. அமைதியும், சுபீட்சமும் நிறைந்த சமுதாயத்தை உருவாக்குவதே சிசுதிரிய வேலைத் திட்டத்தின் நிறைவான பயனாக அமைகின்றது.
குறிப்பாக இன, சமய வேறுபாடுகளுக்கு அப்பால் சகோதரத்துவம், சமாதானம், ஐக்கியம், புரிந்துணர்வு ஆகியவற்றை இளைய தலைமுறையினர் மத்தியில் ஊக்குவிக்கின்ற திட்டமாக சிசுதிரிய விளங்குகின்றது.
போருக்கு பிந்திய சூழலை கையாள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் உருவாக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்கத்துக்கான ஆணைக் குழுவின் முக்கிய பாகங்களோடு சிசுதிரிய திட்டம் ஒத்துப் போகின்றது.
மேற்சொன்ன சுயாதீன ஆணைக் குழு அபிவிருத்தி மற்றும் சமாதானம் ஆகியவற்றை அடைவதற்கான சிறந்த மார்க்கங்களை போதிக்கின்றது.
மக்களின் உளவியல் தேவைகள் பூர்த்திகள் செய்யப்பட வேண்டும். உணர்வுகளுக்கு வடிகால் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அர்த்தம் உள்ள சமாதானம் சாத்தியப்படும்.
மொழிக் கொள்கை, கல்வி, கலாசாரம், ஐக்கியம் என்று பரந்து பட்ட விடயங்களை ஆணைக் குழு கொண்டு உள்ளது.
இவ்வாணைக் குழுவும், சிசுதிரிய வேலைத் திட்டமும் நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை பிரதான இலட்சியமாக கொண்டு உள்ளன என்ற வகையில் ஒற்றுமைப்படுகின்றன.
தேசிய நல்லிணக்கம், நிரந்தர சமாதானம், முறையான அபிவிருத்தி ஆகியவற்றை கட்டி எழுப்ப பாடுபடுகின்றன.
தேசத்தின் மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சியில் சிசுதிரிய வேலைத் திட்டத்துக்கு மிக முக்கியமான பாத்திரம் உள்ளது. அபரமித அபிவிருத்திக்கான முன்னெடுப்புக்கள், சமூக அபிவிருத்திச் செயற்பாடுகள் ஆகியவற்றுக்கான ஆரம்பப் புள்ளியாக இக்கண்காட்சியை கூற முடியும். எனவே மக்களின் சிறந்த வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆரம்பப் புள்ளியாக இக்கண்காட்சி பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆசியுடன் தேசத்தின் மகுடம் தேசிய அபிவிருத்தி திட்டத்தோடு சேர்ந்ததாக தேசத்தின் மகுடம் வருடாந்த கண்காட்சி 2007 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றது. இப்போது இக்கண்காட்சிக்கு 08 வயது. இம்முறை குருணாகல் மாவட்டத்தின் குளியாபிட்டிய நகரத்தில் பிரதானமாக இக்கண்காட்சி நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அபிவிருத்திக்கான கண்காட்சி என்பதற்கு அப்பால் மாணவர்களின் திறமைகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கின்ற இடமாகவும் தேசத்தின் மகுடம் மிளிர்கின்றது. மாணவர்களுக்கு உள்ளே இலைமறை காயாக கிடக்கின்ற திறமைகள் வெளிக் கொணரப்படுகின்றன. இவர்களின் திறமைகள் கடந்த கால யுத்தத்தால் மௌனிக்கப்பட்டு இருந்தன. ஐக்கியம், ஒற்றுமை ஆகியவற்றை பிள்ளைகளின் மனங்களில் நிலை பெற செய்ய இம்முயற்சிகள் பெரிதும் உதவி வருகின்றன.
உலகப் பொது மொழியாக இசை அமைகின்றது. இன, சமய, சமூக வேறுபாடுகளை ஒவ்வொருவரும் வெற்றி கொள்கின்றமைக்கான ஊடகமாக இசை உள்ளது. எனவே தேசத்தின் மகுடம் கண்காட்சியின் சிற்பிகள் இதை மிகுந்த கரிசனையில் கொண்டு இக்கண்காட்சியில் மாணவர்களின் உற்சாக பங்களிப்புடன் அரங்காற்றுகை நிகழ்ச்சிகள் பலவற்றையும் வழமை போல இவ்வருடமும் ஒழுங்கு பண்ணிக் கொடுத்து உள்ளார்கள்.
நாட்டின் பல இடங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து மொத்தத்தில் ஆயிரக் கணக்கான மாணவர்கள் வரவழைக்கப்பட்டு, கலாசார கலைத்துவ அரங்காற்றுகைகளை வழங்கிக் கொண்டு இருக்கின்றனர். தமிழ், முஸ்லிம், சிங்கள பாரம்பரிய நடனங்கள் முதல் வீதி நாடகங்கள் வரை இசையோடு கலந்தவையாக ஏராளம் நிகழ்ச்சிகள் தாராளமாக வழங்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த மாணவர்களின் நிகழ்ச்சிகளுக்கு அருமையான வரவேற்பு காணப்படுகின்றது.
மாணவர்களை பொறுத்த வரை மகிழ்ச்சியான ஒரு சுற்றுப் பயண அனுபவத்தையும் தேசத்தின் மகுடம் கொடுக்கின்றது. மட்டும் அல்லாமல் பல்லினங்களையும் சேர்ந்த மாணவர்களும் இன, சமய வேறுபாடுகளை மறக்கின்ற உறவுப் பாலமாகவும் தேசத்தின் மகுடம் அமைகின்றது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் தென்னிலங்கை மாணவர்களுக்குமான உறவுப் பாலமாக தேசத்தின் மகுடம் மிளிர்கின்றது. சமாதானம், சகோதரத்துவம், நட்பு, ஐக்கியம், புரிந்துணர்வு ஆகியவை இக்கண்காட்சியில் மாணவர்களின் மனங்களில் மிக யதார்த்தமாகவும், இலகுவாகவும் விதைக்கப்படுகின்றன.
தேசிய நல்லிணக்கம், மனித உரிமைகள் ஆகிய இரு விடயங்களும் சர்வதேச மட்டத்தில் இன்று உரத்துப் பேசப்படுகின்ற சூழலில் தேசத்தின் மகுடம் காலத்தின் தேவையாக கனிந்து உள்ளது.
கலைகள், கலாசாரங்கள் ஆகியவற்றை மூலோபாயங்களாக பயன்படுத்தி, வன்முறைகளை அகற்றி, மக்களின் இதயங்களில் அமைதியை நிலை நாட்டலாம் என்பதை இலங்கையிடம் இருந்து சர்வதேசம் கற்றுக் கொள்கின்ற அளவுக்கு இக்கண்காட்சி மகத்துவம் நிறைந்தது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை.
No comments:
Post a Comment