மக்கள் ஒன்றிணைந்தால் அநீதியை வெற்றிகொள்ளலாம்!!
ஃபேஸ்புக் இணையத்தளத்தில் தனக்கு டேக் செய்யப்பட்ட புகைப்படமொன்றைப் பார்த்து, அதிபர் 'வேசி' எனத் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதையையும், அவளது கடிதத்தின் தமிழ்மொழிபெயர்ப்பையும் ஏற்கெனவே உங்களுக்குத் தந்திருந்தேன். சிறுமி வெனுஷா தனது தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிடுவதற்கு முன்பே, அந்த அதிபரான W.M சமன் இந்திரரத்னவின் நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடுகள் பல கொடுக்கப்பட்டிருந்த போதும், அவருக்கிருந்த அதிகாரத்தின் காரணத்தாலும், அரசியல் பலத்தாலும் அந்த முறைப்பாடுகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
கடந்த வருடம் மே மாதத்துக்கு முன்பிருந்தே இந்த அதிபருக்கெதிராகவும், அப் பாடசாலையில் இடம்பெறும் சில மோசமான நடவடிக்கைகள் குறித்தும் பல முறைப்பாடுகள் உயர் கல்வித் திணைக்களங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைக்கப் பெற்றபோதிலும் கூட, எந்த விசாரணை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதிபர், மாணவர்களை உடல் மற்றும் மன ரீதியான துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துகிறார் எனும் மனுவை பெற்றோர்கள் தொடர்ச்சியாக முன்வைத்த நிலையில், இயலாத பட்சத்தில் கடந்த 2013 மே மாதம் 17ஆம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சம்பந்தப்பட்ட பாடசாலை அமைந்திருக்கும் வலயத்தின் கல்வித் திணைக்கள உயரதிகாரிக்கு இது குறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். உத்தரவிட்டு இரு மாதங்கள் கடந்த பின்னர் 2013 ஜூலை மாதம் 23 ஆம் திகதி, அதிபருக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார் அந்த உயரதிகாரி. அதற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆனால், சிறுமி வெனுஷாவின் மரணத்தின் பின்னர், அவளது தற்கொலைக் கடிதம் கிளப்பிய அலை, பூதாகரமாக எழுந்தது. தான் ஒரு தீக்குச்சியாகி ஏனைய மாணவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்ற வேண்டுமென்பதுதான் அவளது எதிர்பார்ப்பாக இருந்தது. அக் கடிதமும், அதன் மொழிபெயர்ப்பும் இணைய ஊடகங்களின் மூலமாக உலகம் முழுவதும் தெரியப்படுத்தப்பட்ட பின்னர் சமூக வலைத்தளங்களில் ஒன்றுசேர்ந்த நல்ல மனங்களின் காரணமாக அதிபருக்கிருந்த அரசியல்பலத்தினால் மறைக்கப்படவிருந்த உண்மைக்கும், மூடி மறைக்க முயற்சி செய்யப்பட்ட அநீதிக்கும் ஒரு நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது.
மேலதிக விசாரணைகளுக்காக நேற்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மகளிர் பிரிவு விஷேட காவல்துறையினரால் அதிபர் சமன் இந்திரரத்ன, கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது, சிறுமியைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டு பதிவாகியிருக்கிறது. 1995 இல 22 குற்றத் தண்டனைச் சட்டத்தின் 308 ஆவது பிரிவின் கீழ், சிறுவர் துஷ்பிரயோகம் எனப்படுவது மனரீதியாகத் துன்புறுத்தலும் சேர்ந்ததுதான் என்பதாலும், 2006 இல 16 குற்றத் தண்டனைச் சட்டத்தின் கீழ் மன ரீதியாகத் துன்புறுத்துவது என்பதுவும் குற்றமாகக் கருதப்படுவதாலும் அப் பிரிவுகளின் கீழ் அதிபருக்கு தண்டனை வழங்கப்படச் சாத்தியமிருக்கிறது. அவர் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பத்து வருடத்துக்குக் குறையாத சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க நேர்வார்.
அதிபர் சிறுமியின் நடத்தை குறித்து தவறாகக் கூறியதால் மன உளைச்சலுக்குள்ளான சிறுமியின் தந்தை, மரண விசாரணைக்கான உடல் பரிசோதனையின் போது, சிறுமியின் கன்னித்தன்மை சான்றிதழையும் வைத்தியர் குழுவிடம் கோரியிருந்தார். எந்தப் பெற்றோருக்கும் நேரக் கூடாத விடயம் இது. எனினும், சிறுமி கன்னித்தன்மையுடனே மரணித்திருக்கிறாள் எனச் சான்றிதழ் கிடைக்கப் பெற்றதையடுத்து அதிபர் சிறுமி மீது குறிப்பிட்ட 'வேசி - விபச்சாரி' எனும் கூற்று பொய்யாகியிருக்கிறது. அத்தோடு சிறுமியின் தற்கொலைக்கு அவளது பெற்றோரே காரணமென பகிரங்கமாக அரசியல் மேடைகளில் உரைத்து, அதிபரைக் காப்பாற்ற முனைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோரது கருத்துக்கள், அநீதியை எதிர்த்து எழுந்த மக்களது ஆர்ப்பாட்டங்களின் முன்னிலையில் அடிபட்டுப் போயிருக்கிறது.
எதற்கும் தற்கொலை தீர்வல்ல. ஏனைய மாணவர்களின் நல்வாழ்வுக்காக தற்கொலை செய்துகொண்ட சிறுமி வெனுஷாவின் நடவடிக்கையை யாரும் இங்கு முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடாது. எனினும், மக்கள் ஒன்றிணைந்தால், அநீதிகளுக்கெதிராக எதையும் சாதிக்கலாம் என்பதையே இது நிரூபித்திருக்கிறது.
இங்கு செய்தியாகப் பதிவிட்டும், எனது வலைத்தளம் மற்றும் ஃபேஸ்புக் முகப்பிலிருந்து பகிர்ந்தும் இந்த அநீதிக்கெதிராக ஒன்றிணைந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
பிந்திய பதிவேற்றம் -
கைதுசெய்யப்பட்ட குருநாகல் ஜோன் கொத்தலாவல வித்தியாலய அதிபர் சமன் இந்திரரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
25,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் இவரை விடுவிக்க குருநாகல் பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment