Tuesday, February 25, 2014

நவநீதம்பிள்ளையின் தீர்மானம் நிறைவேற்றினாலும் , நிறைவேற்றா விட்டாலும் இலங்கைக்கு ஒன்று செய்ய முடியாது. சம்பிக்க ரணவக்க.

ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடரில் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார். அந்த அறிக்கையின் ஊடாக இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச பொறிமுறை அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவரின் அந்த அறிக்கை நிறைவேற்றப்பட்டாலும் நிறைவேற்றப்படாவிட்டாலும் இலங்கை அதற்கு சம்மதிக்கவில்லையாயின் ஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் எதனையும் செய்ய முடியாது. இதற்கு முன்னர் இஸ்ரேலுக்கு இவ்வாறு கொண்டுவந்தனர். ஆனால் இஸ்ரேல் இணங்காமையினால் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க.

கொழும்பில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச பொறிமுறையை இலங்கையில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளரினால் தீர்மானம் நிறைவேற்ற முடியாது. அவருக்கு அவ்வாறான நிறைவேற்று அதிகாரம் எதுவும் இல்லை.

மேலும் சர்வதேச பொறிமுறையை நடைமுறைப்படுத்தவதற்கு இலங்கை 2009 இல் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துடன் இணங்கவில்லை. பான் கீ. மூன் எவ்வித அதிகாரமுமற்ற ஐ.நா. பாதுகாப்பு மற்றும் பொதுச் சபையின் தீர்மானங்களை நிறைவேற்றுபவர் மட்டுமேயாகும். அவரினால் நிறைவேற்று தீர்மானங்களை எடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச பொறிமுறையை இலங்கையில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளரினால் தீர்மானம் நிறைவேற்ற முடியாது. அவருக்கு அவ்வாறான நிறைவேற்று அதிகாரம் எதுவும் இல்லை. எனினும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை மற்றும் பொதுச் சபை என்பனவற்றில் ஏதாவது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால் அதற்கு இலங்கை கட்டுப்படவேண்டியேற்படும்.

ஆனால் பாதுகாப்புச் சபையிலும் பொதுச் சபையிலும் இலங்கைக்கு ஆதரவான நாடுகள் இருப்பதால் நாம் குழப்படையவேண்டியதில்லை. அங்கு இலங்கை ஆதரவு நாடுகள் இலங்கையை கைவிடாது. எனினும் இந்த விடயங்களை வைத்துக்கொண்டு சில நாடுகள் தனித்து இலங்கை மீது ஏதாவது நடவடிக்கைகளை எடுக்கலாம். இலங்கையின் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்துவதே மேற்கு நாடுகளின் நோக்கமாகவுள்ளது. உதாரணமாக 2002 ஆம் ஆண்டு இந்தியாவின் குஜராத்தில் நடைபெற்ற கலவர விவகாரத்தில் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா வீசா வழங்காமல் இருக்க தீர்மானம் எடுத்தது. இது அமெரிக்காவின் தனித் தீர்மானமாகும். அதுபோன்று சில நாடுகள் தனித்து நடவடிக்கை எடுக்க முயற்சிக்கலாம்.

கடந்த காலங்களில் பாகிஸ்தான் நேபாளம் மாலைதீவு பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இவ்வாறு ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தினர். தற்போது அந்த விடயத்தை இலங்யைில் ஏற்படுத்த முயற்சி்க்கின்றனர்.

இதேவேளை 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி வன்னிக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை அனுப்பி பிரபாகரன் உள்ளிட்டவர்களை பாதுகாப்பதற்கு சதிஷ் நம்பியார் முயற்சித்தார். ஆனால் அப்போது ஜனாதிபதி ஜோர்தானுக்கு சென்றிருந்ததால் பான் கீ மூனால் இலங்கைக்கு 17 ஆம் திகதி வரமுடியவில்லை. எனவே அவர் 21 ஆம் திகதி வருகை தந்தார். அவர் வரும்போது அனைத்தும் முடிந்திருந்தது.

அப்போது அவருடன் பொறுப்புக்கூறல் தொடர்பில் உடன்பாடு எட்டப்பட்டது. அந்த உடன்பாட்டில் சர்வதேச பொறிமுறை பற்றி எதனையும் குறிப்பிடவில்லை. பொறுப்புக்கூறல் தொடர்பில் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். திருகோணமலை மாணவர் கொலை தொடர்பாக விசாரணைகள் நல்லிணக்க ஆணைக்குழு என்பவற்றை குறிப்பிடலாம்.

பான் கீ. மூன் எவ்வித அதிகாரமுமற்ற ஐ.நா. பாதுகாப்பு மற்றும் பொதுச் சபையின் தீர்மானங்களை நிறைவேற்றுபவர் மட்டுமேயாகும். அவர் ஒரு எழுது வினைஞரைப் போன்றவர். அவரினால் நிறைவேற்று தீர்மானங்களை எடுக்க முடியாது என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com