"ஜெயலலிதா ஒரு சினிமா நடிகை. அவருக்கு சட்டங்கள் தெரியாது. சுப்பிரமணியசுவாமி ஆவேசம்.
இந்தியப் பிரதமர் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சுப்ரமணியசாமி இது தொடர்பாக வதோதராவில் செய்தியாளர்களிடம் பேசும்போது , "ஜெயலலிதா ஒரு சினிமா நடிகை. அவருக்கு சட்டங்கள் தெரியாது. சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றி கவலைப்படாமல், அவர் இப்படி முடிவெடுத்திருக்கிறார்.
ஜெயலலிதா இத்தகைய முடிவை எடுப்பதைத் தடுப்பதற்கு, மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேவை எனில், அவர் மீது நடவடிக்கையும் மேற்கொள்ளலாம்" என்றார் சுப்பிரமணியன் சுவாமி.
ஷானவாஸ் ஹூசைன் பாஜகவின் மற்றொரு தலைவரான ஷானவாஸ் ஹுசைன் கூறும்போது, "தமிழக அரசு இந்த விவகாரத்தில் பல்வேறு தவறுகளைச் செய்துவிட்டது. இது மிகவும் முக்கியமான விவகாரம் என்பதுடன், இது தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மக்களுக்கு நீதித் துறை மீது நம்பிக்கை உள்ளது. அனைவருக்குமே சமமான நீதி கிடைக்க வேண்டும்" என்றார்.
இந்தியப் பிரதமர் தமிழக அரசின் மேற்படி முடிவுக்கு எதிர்ப்பு
ராஜீவ் காந்திக் கொலை வழக்கில், ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் காட்டமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
"ராஜீவ் காந்தி படுகொலை வழக்குத் தொடர்பாக எழுந்துள்ள சட்டத்தின் அடிப்படை விவகாரங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்கிறது.
மேலும், ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்கும் நடவடிக்கை சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல என்றும், அந்த நடவடிக்கைகளைத் தொடரக் கூடாது என்றும் தமிழக அரசிடம் தகவல் தெரிவித்துவிட்டோம்.
ராஜீவ் காந்தி படுகொலை என்பது இந்திய ஆன்மா மீதான தாக்குதல். நம்முடைய மிகச் சிறந்த தலைவர்களுள் ஒருவரான முன்னாள் பிரதமரையும், இந்திய குடிமக்கள் பலரையும் கொன்றவர்களை விடுதலை செய்வது, அனைத்து விதமான நீதியின் கொள்கைகளுக்கு முரணானது. தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில், எந்த ஒரு அரசும், கட்சியும் மென்மையானப் போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது" என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
முன்னதாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.
இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகள் கால தாமதம் செய்ததன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்வதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இதன் தொடர்ச்சியாக, ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment