விமான நிலையங்களை அமைக்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு இல்லை- கெஹெலிய ரம்புக்வெல்ல
இலங்கை அரசியல் யாப்பில் எந்தவொரு இடத்திலும் விமான நிலையங்களை நிறுவுவதற்கான அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவில்லை எனவே மூன்றாவது விமான சேவையினை நிறுவுவது தொடர்பில் வட மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணை தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளப்போவதில்லையென தகவல் ஊடகத்துறையமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.
இதேவேளை வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அரசாங்கத்தை தொடர்ந்தும் குறை கூறி வருவதிலிருந்து அவரது நேர்மையில் எனக்கு சந்தேகம் எழுந்துள்ளதெனவும் அமைச்சர் கெஹெலிய தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் ஊடகத்துறையமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து இந்தியாவுக்கான விமான சேவையின் அவசியம் குறித்து வட மாகாண சபை நிறைவேற்றியிருக்கும் பிரேரணை தொடர்பில் செய்தியாளரொருவர் எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்குகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
வட மாகாணத்தின் பலாலியிலிருந்தும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையிலிருந்தும் இந்தியாவின் தமிழ்நாட்டில் திருச்சி வரையிலான விமான சேவையின் அவசியம் குறித்தே இறுதியாக நடைபெற்ற வட மாகாண சபை அமர்வின்போது பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை அரசியல் யாப்பினை பொறுத்தவரையில் விமான சேவைகள் மற்றும் துறைமுகத்தினை நிறுவுவதற்கான முழு அதிகாரமும் மத்திய அரசாங்கத் திடமே உள்ளது மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை சொல்லும் அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தில் கூட மாகாண சபைக்கென தனியானதொரு விமான சேவையை நிறுவுவது பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில் இவ்வாறானதொரு பிரேரணை எந்தவகையிலும் செயற்படுத் தப்பட முடியாத ஒரு விடயமெனவும் அமைச்சர் கெஹெலிய விளக்கமளித்தார்.
வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பல கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அவை எதுவும் இதுவரை நிறைவேற்றப்பட வில்லையென குற்றம் சுமத்தியுள்ளாரே யென ஊடகவியலாளர் ஒருவர் எழுப்யிய வினாவுக்கு பதிலளித்த அமைச்சர் கெஹெலிய, ஜனாதிபதியை சந்தித்து அவர் உரையாடியுள்ளார்.
அவர் முன்வைத்த சில கோரிக்கைகளை ஜனாதிபதி நிறைவேற்றியதுடன் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றார் எனினும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் பல இடங்களிலும் எதற்காக அரசாங்கத்தை குறைகூறி வருகிறாரென எனக்குப் புரியவில்லை எனவே அவரது நேர்மையில் எனக்கு சந்தேகம் உண்டு ஆகவே அவரது கருத்துகளுக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லையெனவும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் வெளிப்படையாகவே கூறினார்.
0 comments :
Post a Comment