Tuesday, February 25, 2014

அரசாங்கம் அனைத்து இனங்களையும் சமமாக பார்கின்றதாம். அமெரிக்க துாதரக அதிகாரியிடம் வவுனியா அரசாங்க அதிபர்.

அரசாங்கம் அனைத்து இனங்களின் உரிமைகளையும் பாதுகாத்து வடக்கிலும் தெற்கிலும் சமமான அபிவிருத்திகளை மேற்கொண்டு வருவதாகவும், இனவாத போக்கில் அரசாங்கம் ஒருபோதும் செயற்படவில்லையென்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், அமெரிக்க தூதரக அதிகாரியிடம் எடுத்துரைத்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் ஆர்.ஈ.எஸ்.குரூஸ் தலைமையிலான குழு வவுனியா அரசாங்க அதிபர் எம்.கே.பந்துலவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போதே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

தற்போது நாட்டில் நிலவும் அமைதியான சூழ்நிலையில் வடபகுதி மக்கள் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். இவ்வாறான நல்லிணக்க சூழ்நிலையை அழித்தொழித்து இன பேதத்தை உருவாக்கி நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச் செல்வதற்கு ஒரு சிலர் முயற்சிப்பதாகவும் அரச அதிபர் அமெரிக்க தூதரக அதிகாரியிடம்; இச்சந்திப்பின் போது தெரிவித்தார்.

கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் வெற்றி உள்ளிட்ட விடயங்களையும் அவர் அமெரிக்க பிரதிநிதியிடம் தெளிவுப்படுத்தினார். சுகாதாரம், கல்வி, விவசாயம், ஆகிய துறைகளின் அபிவிருத்திக்கும் வடக்கின் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது.

அத்துடன் எல்ரிரிஈ உறுப்பினர்கள் ஏராளமானோர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தும் நடவடிக்கைகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதுடன் அவ்வாறு புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் தனியார் மற்றும் அரச துறைகளில் பணியாற்றுவதாகவும் தெரிவி;த்தார். இவ்வாறான சூழ்நிலையில் சர்வதேச சமூகம் நிரந்தர அமைதிக்கும் அபிவிருத்திக்கும் உதவ வேண்டுமேயல்லாமல் மீண்டும் பயங்கரவாதத்திற்கு உயிரூட்டி மக்களின் வாழ்வை நாசப்படுத்துவதற்கு உதவ கூடாதெனவும் அமெரிக்க தூதரக அதிகாரியிடம் அரச அதிபர் எடுத்துரைத்தார்.

No comments:

Post a Comment