Tuesday, February 18, 2014

கச்சதீவைப் பற்றிப் பேசக்கூடாது! கருணாநிதிக்கு இந்திய உச்ச நீதிமன்ற உத்தரவு.

கச்சத்தீவின் உரிமை இலங்கைக்கே அதனை மீண்டும் கோர முடியாது. கச்சத்தீவில் மீன்பிடிப்பதற்கும் இந்திய மீனவர்களுக்கு தடையாகும். கச்சத்தீவு விவகாரம் முடிந்து போன கதையாகும் அதனை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை எனவும் இந்திய மத்திய அரசு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இலங்கைக்கு வழங்கிய கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் எனவும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் திராவிட முன்னேற்ற கழகம் தலைவர் மு.கருணாநிதி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இம்மனுவுக்கு அளித்த பதிலின் போதே இந்திய மத்திய அரசாங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் 1977ம் ஆண்டு அனைத்து பிரச்சினைகளும் ஆய்வு செய்து இருநாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதே அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து விட்டன. கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்படவில்லை. அவ்வாறு தெரிவிப்பது அதிகார பூர்வ ஆவணங்களிலுள்ள விடயங்களுக்கு முரணானது.

இலங்கை கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பது உரிமையில்லை என அவ் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இவ் ஒப்பந்தத்தின் படி இந்திய மீனவர்களும், யாத்திரிகர்களும் கச்சத்தீவு செல்ல முடியும். ஆனால் இதனை மீன்பிடிப்பதற்கான உரிமையாக கருத கூடாது. இந்தியாவுக்கு சொந்தமான பகுதி இலங்கைக்கு கொடுக்கப்படாத நிலையில் அது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில்' சமரப்பிக்கப்பட தேவையில்லை. எனவே இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான கடல் எல்லை பிரச்சினையும், கச்சத்தீவு இறையான்மை குறித்த பிரச்சினையும் முடிந்து போன விடயம் எனவும் அதை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை எனவும் இந்திய மத்திய அரசு அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. மிக மிக சரியான தீர்ப்பு!

    கச்சதீவை வைத்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அரசியல் நடத்துவதை யாரும் இனிமேலும் அனுமதிக்க முடியாது.

    ReplyDelete