Friday, February 21, 2014

8 ஆவது தேசத்துக்கு மகுடம்' கண்காட்சி ஆரம்பம்!(படங்கள் இணைப்பு)

“உன்னதமான சமாதானத்தின் ஊடாக வளமான தேசம்” என்ற தொனிப்பொருளில் இம்முறை 8 ஆவது தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி இன்று மாலை 5.00 மணிக்கு குளியாபிட்டியில் கோலாகலமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.



இந்தக் கண்காட்சியை பார்வையிட வருகை தரவுள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கான சகல வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கண்காட்சிக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கண்காட்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இன்று மாலை ஆரம்பமாகிய இக்கண்காட்சி எதிர்வரும் 27ம் திகதி வியாழக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டியவில் அமைந்துள்ள வடமேல் மாகாண பல்கலைக்கழகம், தொழில்நுட்பக்கல்லூரி, குளியாபிட்டிய மத்திய மகா வித்தியாலயம் ஆகிய இடங்களை உள்ளடக்கிய 162 ஏக்கர் காணியில் இக்கண்காட்சி இம்முறை நடைபெறுகிறது.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷயின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் உட்பட சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள் தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் சுமார் 500இற்கும் அதிகமான காட்சி கூடங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியை பார்வையிட வரும் மக்களுக்குத் தேவையான உணவு, சுகாதாரம், சுத்தமான குடிநீர், மின்சாரம், போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இம்முறை கண்காட்சியை முன்னிட்டு குருநாகல், கேகாலை, புத்தளம் ஆசிய மூன்று மாவட்டங்களில் 50,000 மில்லியன் ரூபா செலவில் பாரிய அபிவிருத்திப் பணிகள் நடைபெற்று வருவதுடன், உட்கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதவேளை, கண்காட்சியை முன்னிட்டு பொலிஸ் திணைக்களம் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதோடு 6,000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் 1,000 பொலிஸார் சிவில் உடையில் கடமைகளிலும் 2,000 பொலிஸார் போக்குவரத்து கடமைகளிலும் 3,000 பொலிஸார் பொதுவான பாதுகாப்பு கடமைகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கண்காட்சியை பார்வையிட வருபவர்களுக்கான நாரம்மல, பன்னல, மாதம்பை, ஹெட்டிபொல, பிங்கிரிய ஆகிய ஐந்து வீதிகளை பயன்படுத்த முடியுமென்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கண்காட்சியை பார்வையிட சிறுவர்களை அழைத்துவரும் பெற்றோர் அவர்களின் சட்டைப் பையில் தங்களது தொலைபேசி இலக்கங்களையோ வீட்டு முகவரிகளையோ எழுதி கடிதம் ஒன்றை வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவென 433 பொலிஸார் விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.கண்காட்சியை முன்னிட்டு குருநாகல், குளியாபிட்டிய உட்பட அதனை அண்மித்த பிரதேசங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மும் மொழிகளிலும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகள், பெனர்கள் மற்றும் கட்அவுட்கள் தொங்கவிடப்பட்டுள்ளன.

இதேவேளை தேசத்திற்கு மகுடம் இலட்சினை பொறிக்கப்பட்டுள்ள இலங்கை லொத்தர் சபையின் 20ரூபா பெறுமதியான லொத்தர் சீட்டை பெற்றவர்கள் அதனை கண்காட்சியை பார்வையிடுவதற்கான நுழைவுச்சீட்டாக பயன்படுத்த முடியும் என்பதுடன் பாடசாலை சீருடையில் வருகை தரும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் முற்றிலும் இலவசமாக கண்காட்சியை கண்டுகளிக்க முடியும் என்று குருநாகல் மாவட்ட அரசாங்க அதிபர் எச். எம். பி. ஹிடிசேகர தெரிவித்தார்.

பிள்ளைகளின் அறிவை வளர்ப்பதற்கு உதவியாக இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளதடன் முப்படைகள், பொலிஸாரின் விசேட காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், நாட்டிலுள்ள சகல அரச மற்றும் தனியார் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களை உள்ளடக்கிய காட்சி கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன.

கண்காட்சியை பார்வையிட மாணவ, மாணவியர்கள், மக்களின் நலன்கருதி 7 நாட்களும் கலை கலாசார நிகழ்ச்சிகள், போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளஅஇதேவேளை, இம்முறை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய அபிவிருத்தி பணிகளுக்கு மேலதிகமாக மக்களின் குறைகளை கேட்டறிந்து மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com