நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தல்லைமையிலான அரசியல் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கௌ.அ.அஸ்மின் அவர்களின் ஏற்பாட்டில் யாழ். முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கான சிவில் சமூக முன்னெடுப்புகள் என்னும் அமைப்பினர் காணாமல் போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவை கடந்த 15-02-2014 அன்று யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் சந்தித்து தமது முறைப்பாடுகளை முன்வைத்தனர்.
மேற்படி முறைப்பாட்டில்..
1990ம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப் புலிகளினால் வடக்கு மாகாண முஸ்லிம்கள் அவர்களது பூர்வீகப்பிரதேசத்தில் இருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டமை அனைவரும் அறிந்த விடயமே.
1983கள் முதல் 1990கள் வரை வடக்கில் செயற்பட்ட ஆயுத ரீதியான இயக்கங்கள் பல செயற்பட்டு வந்தன, 1990களின் பின்னர் வடக்கில் செல்வாக்கு மிக்க இயக்கமாக விடுதலைப் புலிகள் செயற்பட்டார்கள். 1990கள் முதல் 2008ம் ஆண்டுவரை விடுதலைப் புலிகளின் செல்வாக்கு அதிகமாக காணப்பட்டது எனக் குறிப்பிட முடியும்.
இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த 37 நபர்கள் காணாமல் போயுள்ளனர் அவர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களாலும், விடுதலைப் புலிகளினாலும், இந்திய இராணுவத்தின் ஆதரவுடன் இயங்கிய குழுக்களாலும், இராணுவத்தினராலும் கடத்தப்பட்டார்கள் என்பதற்குரிய ஆதாரங்கள் குறித்த காணாமல் போனோரினது குடும்பங்களிடம் காணப்படுகின்றன. இவற்றை தங்களுடைய ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கும் வாய்ப்பு முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும் என நாம் தங்களை தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.
அத்தகைய மக்கள் அதிகமானவர்கள் புத்தளம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்து வாழ்வதனால் புத்தளத்தில் அவ்வாறான ஒரு சந்திப்பினை ஏற்பாடு செய்வது பொறுத்தமாக இருக்கும் என எதிர்பார்க்கின்றோம். என அவர்கள் ஆணைக்குழுவினரைக் கேட்டுக்கொண்டனர்.
இதனை தாம் மிகவும் வரவேற்பதாகவும், உரிய ஏற்பாடுகள் புத்தளத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார் என யாழ். முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கான சிவில் சமூக முன்னெடுப்புகள் அமைப்பின் செயற்திட்ட முகாமையாளர் எம்.எம்.எம்.அஜ்மல் தெரிவித்தார்.
No comments:
Post a Comment