அரசாங்கத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே விட்டுக்கொடுப்பற்ற நிலை ஆழமடைகின்றது! By S. Jayanth
தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் ஒரு முன்னணி அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தேசிய பிரச்சினை என்று அழைக்கப்படுவது பற்றி விவாதிக்க பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்குமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ கடந்த வாரம் விடுத்திருந்த அழைப்பை நிராகரித்தது. 2009ல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்த தீவின் நீண்டகால உள்நாட்டு யுத்தத்துக்கு ஒரு "அரசியல் தீர்வு" காண முயல்வதாகக் காட்டுவதற்கு கொழும்பு மேற்கொள்ளும் இன்னொரு முயற்சியாகும்.
தம்முடன் ஒரு அதிகாரப் பகிர்வு உடன்பாட்டுக்கு வர அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்து வருவதையிட்டு கூட்டமைப்பு விரக்தியடைந்துள்ளது. டிசம்பர் 24, வவுனியாவில் சந்தித்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கொழும்பு “நல்லிணக்கத்துக்கான” தனது பிரேரணைகளை, உதாரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் தட்டுக்களுக்கு அதிகாரப் பகிர்வின் பேரிலான உடன்பாட்டுக்கான பிரேரணைகளை, "பகிரங்கமாக்கும் வரை" அதனுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்துவதில்லை எனத் தீர்மானித்தனர்.
இராஜபக்ஷ அரசாங்கம், புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணையை மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபை (UNHRC) கூட்டத்தில் ஸ்தாபிக்கும் நகர்வுகள் பற்றி விழிப்புடன் உள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனும் இலங்கைக்கு எதிரான ஒரு புதிய தீர்மானத்தை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளன. இராஜபக்ஷ, கூட்டமைப்பை பேச்சுவார்த்தைகளில் சம்பந்தப்படுத்திக்கொள்வதன் மூலம் யூ.என்.எச்.ஆர்.சீ.யின் அழுத்தத்தை திசைதிருப்ப முடியும் என்று எதிர்பார்க்கிறார்.
கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்துவதோடு தீவின் வடக்கு மற்றும் கிழக்கிற்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை வழங்க வேண்டும் என கொழும்பைக் கோரும் ஒரு அமெரிக்கப் பிரேரணைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தை ஆதரித்த அமெரிக்கா மற்றும் இந்தியாவும், இப்போது, இந்திய பெருங்கடல் பகுதியில் தமது புவிசார் அரசியல் சூழ்ச்சிக்கு சாதகமாக கொழும்பின் யுத்தக் குற்றங்களை சுரண்டிக்கொள்கின்றன.
சீனாவிற்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட அதன் ஆசியாவுக்கு "மீண்டும் திரும்புதலின்" ஒரு பகுதியாக, அமெரிக்கா கொழும்புக்கும் பெய்ஜிங்கிற்கு இடையே பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை கீழறுப்பதற்கு முயல்கிறது. பிராந்திய போட்டியாளனாக சீனாவைக் கருதும் இந்தியாவும், கொழும்பில் பெய்ஜிங்கின் செல்வாக்கை கவிழ்க்க முயற்சிக்கின்றது.
இலங்கையில் தமிழ் முதலாளித்துவத் தட்டின் நலன்களை பாதுகாப்பதற்காக இந்த சர்வதேச அழுத்தத்தை பயன்படுத்திக்கொள்ள கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது. பாராளுமன்ற தெரிவு குழுவில் பங்கேற்க மறுக்கும் அதே வேளை, 30 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் சொத்து சேதம் பற்றிய அரசாங்கத்தின் தற்போதைய கணக்கெடுப்பை நிராகரிக்கவும் கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பு ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ள ஒரு அறிக்கையின் பாகமாகும்.
முன்னர், “பொதுமகன் ஒருவரும் கொல்லப்படாத மனிதாபிமான நடவடிக்கையிலேயே” இராணுவம் ஈடுபட்டது எனக் கூறிய ஜனாதிபதி இராஜபக்ஷ, போர் குற்றங்களில் இராணுவத்தின் பொறுப்புடைமை பற்றிய ஆதாரங்களை தள்ளுபடி செய்தார். எனினும், போரின் இறுதி வாரங்களில் குறைந்தபட்சம் 40,000 பேர் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா. கணக்கிட்டுள்ளது. பிபிசியின் சனல் 4, இலங்கை அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்கள் பற்றி இரண்டு திரைப்படங்களைத் தயாரித்துள்ளது.
டிசம்பர் 28 அன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னணி பாராளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன், மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூடும போது தனது அமைப்பு யுத்த குற்றங்கள் தொடர்பான "ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கும்" என்று ஊடகத்திடம் கூறினார். தமிழ் கூட்டமைப்பு, கொழும்பில் உள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும் விளக்கமளிக்கும் என்றும் அவர் கூறினார்.
கூட்டமைப்பின் பிரதான அக்கறை போர்க்குற்றங்களோ அல்லது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளோ அல்ல. இந்தக் கட்சி, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் நலன்களை அன்றி, தமிழ் முதலாளித்துவ தட்டின் நலன்களை அடையக் கூடிய வகையில் யுத்தத்துக்கு ஒரு "அரசியல் தீர்வு" காண முயற்சிக்கின்றது. கடந்த செப்டம்பரில் வட மாகாண சபை தேர்தலில் வெற்றிபெற்ற கூட்டமைப்பு அதன் அதிகாரங்களை விரிவாக்கிக்கொள்ள விரும்புகிறது.
கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் மற்றும் வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனும், முன்னர் கொழும்புடன் ஒரு கொடுக்கல் வாங்கலை எதிர்பார்த்த போது, தாம் கடந்த போனவற்றுக்குள் –அதாவது யுத்தக் குற்றங்கள்- செல்ல விரும்பவில்லை என்றனர். ஆனால் சிங்கள இனவாத கட்சிகள் மற்றும் குழுக்களின் அரசியல் ஆதரவில் தங்கியிருக்கும் இராஜபக்ஷ, தமிழ் உயரடுக்குக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கூட வழங்க விரும்பவில்லை.
விக்னேஸ்வரன், இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ், மாகாண சபையின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பெற முயன்று வருகிறார். அரசியலமைப்பை மீறி, கொழும்பு இந்த அதிகாரங்களை வழங்க விரும்பவில்லை என்று தெளிவுபடுத்திவிட்டது. பின்னர் இராணுவ ஆளுநர் சந்திரசிறியை நீக்கி ஒரு சிவிலியன் ஆளுனரை பதிலாக நியமிக்க வேண்டும் என வடமாகாணசபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இதை கொழும்பு நிராகரித்துவிட்டது.
உண்மையில், இராஜபக்ஷ அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கில் அதன் இராணுவ இருப்பை பலப்படுத்துகிறது. இது தற்போது இந்த பகுதிகளில் இராணுவ கட்டுமானங்களை விரிவாக்குவதோடு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க உட்கட்டமைப்பை கட்டியெழுப்புகிறது. யாழ்ப்பாண குடாநாட்டில் அச்சுவேலியில் தொழில்துறை வலயம் ஒன்று பூர்த்தி செய்யப்பட்டு வருவதோடு பல் தேசிய M&S என்ற ஆடை நிறுவனம் ஒன்றும் கிளிநொச்சியில் தொழிற்சாலையை நிறுவியுள்ளது. யாழ் குடாநாட்டை சுற்றி பல தீவுகளும் சுற்றுலா அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த அபிவிருத்திகள், தாம் அலட்சியம் செய்யப்படுகிறோம் என்று உணருகின்ற தமிழ் தட்டின் கவலைகளுக்கு எண்ணெய் வார்க்கின்றன. கூட்டமைப்பானது உலக மூலதனத்தை ஈர்க்கவும் தமிழ் தொழிலாள வர்க்கத்தை கூட்டாக சுரண்டுவதற்குமான அதன் முயற்சிகளுக்கு சர்வதேச ஆதரவை பெற முயற்சிக்கின்றது.
இராஜபக்ஷவின் பாராளுமன்ற தெரிவுக் குழு, 1987ல் கைச்சாத்தான இந்திய இலங்கை உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இருந்த 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துவதை எதிர்கொள்வதற்கே கடந்த ஜூன் மாதம் அமைக்கப்பட்டது. இலங்கையில் உள்நாட்டு போர் பிராந்தியத்தை ஸ்திரமற்றதாக்கும் என்று கவலையடைந்த இந்தியா, புலிகளை நிராயுதபாணியாக்க உடன்படிக்கையின் கீழ் இலங்கையின் வடக்கிற்கு இராணுவ "அமைதிப்படையை" அனுப்பியது. கொழும்பு, தமிழ் உயரடுக்கிற்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை கொடுக்கும் மாகாண சபை அமைப்பை அமைக்க 13வது திருத்தத்தை நிறைவேற்றியது.
ஒப்பந்தம் முறிந்த நிலையில், 13 ஆம் திருத்தம் ஒரு இறந்த கடிதமாகி, இந்திய துருப்புக்கள் திருப்பி அழைக்கப்பட்டு, போர் மீண்டும் தொடங்கியது. வடக்கு மற்றும் கிழக்கு இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. புலிகளின் தோல்வியை அடுத்து, 13வது திருத்தத்தை அமுல்படுத்த மறுத்த இராஜபக்ஷ அரசாங்கம், அமெரிக்கா மற்றும் அதன் பங்காளிகளின் அழுத்தத்தின் கீழேயே கடந்த ஆண்டு வட மாகாண சபை தேர்தலை நடத்தியது.
இராஜபக்ஷ, சர்வதேச அழுத்தத்தை திசைதிருப்பும் முயற்சியில் பாராளுமன்ற தெரிவுக் குழுவை நிறுவினார். ஆளும் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கும் ஜாதிக ஹெல உறுமய மற்றும் எதிர் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபீ) உட்பட சிங்கள அதிதீவிரவாத கட்சிகள், இது தமிழர்கள் கையில் அதிகாரத்தை கொடுக்கின்றது என்று பொய்யாக கூறிக்கொண்டு அதில் பங்கேற்க மறுத்துவிட்டன.
பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்க கூட்டமைப்பு மறுப்பது, சிங்களம் மற்றும் தமிழ் ஆளும் தட்டுகளுக்கு இடையில் அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தமாக கொழும்பு அரசாங்கத்துடன் நிலவும் ஒரு விட்டுக்கொடுப்பற்ற நிலையையும் மற்றும் அதனோடு பிணைந்ததாகியுள்ள ஆழமான புவிசார் அரசியல் போட்டிகளையும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.
0 comments :
Post a Comment