வெளிநாடுகளிலிருந்து நீலிக் கண்ணீர் வடிப்போரது கதையானது "ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதைக்கு ஒப்பாகும்" - மஹிந்த
வெளிநாடுகளிலிருந்து நீலிக் கண்ணீர் வடிப்போர் இந்த நாட்டு மக்கள் பட்ட துன்பத்தை உணராதவர்களே எனவும். வெளிநாடுகளிலிருந்து நீலிக் கண்ணீர் வடிப்போரது கதை யானது "ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதைக்கு ஒப்பாகும்" எனவும் வெளிநாடுகளிலிருந்து தாய் நாட்டுக்கு எதிராக தவறான பிரசாரங்களை மேற்கொள்பவர்கள் இங்கு வந்ததுமில்லை, வாழ்ந்ததுமில்லை. அவர்கள் இங்கு வந்து உண்மை நிலையை அறிய வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கேட்டுக் கொண்டார்.
கொழும்பு இராமநாதன் மகளிர் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பெருந்திரளான தமிழ் மக்கள், மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, கொழும்பு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். அத்துடன் இக் கல்லூரியில் இன்று விருது பெறும் மாணவிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமை யடைகிறேன். திருக்குறளில் 'கற்றதனால் ஆய பயனென் கொள் லாலறிவன் நற்றார் தொழா அர் எனின்' என ஒரு குறள் உள்ளது. இது கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கிறது. எனினும் தெய்வ பக்தியுள்ள மாணவர்களுக்கு இது மிக பொருத்தமாகும்.
நான் இந்த இந்துக் கல்லூரிக்கு வருகை தந்போது என்னை இங்குள்ள வரசித்தி விநாயகர் கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடுகளில் கலந்துகொள்ளச் செய்து இறை ஆசி பெற வைத்தனர். மாணவிகளுக்குக் கல்வியைப் போலவே சமய பக்தி மற்றும் திறமைகள் மிக முக்கியமானது. இந்த பாடசாலையை ஆரம்பித்த ஸ்தாபகர்கள் கல்வியுடன் சமய பக்தியையும் மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர். இதற்கிணங்க நித்தமும் தெய்வத்தை துதிக்கும் மாணவர்களின் உள்ளத்தில் தெய்வம் குடிகொள்வது உறுதி.
அதேபோன்று இக்கல்லூரியின் மாணவிகள் தமது பெற்றோருக்கும், ஆசிரியர் களுக்கும் சமயத்திற்கும் குறிப்பாக தாம் பிறந்த தாய் நாட்டின் மீது அன்பு செலுத்துவது முக்கியமாகும். இக்கல்லூரி,1981ல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது 33 வருடங்களுக்கு முன் இந்த கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட போது 26 மாணவிகளே இருந்துள்ளனர். இரண்டு ஆசிரியர்களே அவர்களுக்குக் கற்பித்துள்ளனர். இப்போது 2000 ற்கும் மேற்பட்ட மாணவர்களும் 98 ஆசிரியர்களும் இங்குள்ளனர்.
இந்தக் கல்லூரியின் முன்னேற்றம் குறித்து நாம் மகிழ்ச்சியடைவதுடன் இது புதுமையல்ல. ஏனெனில், இன்று நாட்டிலுள்ள சுதந்திரத்தின் பிரதிபலன் அது. உள்ளத்தில் பயமில்லாது செயற்படும் போது அதன் பிரதிபலன் நன்றாகவே இருக்கும்.
இம்முறை பல்கலைக்கழகத்துக்கு அதிகமாக அனுமதி பெற்றவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் வடக்கு மாணவர்களே. கண்கள் இருப்பது கற்றவர்களின் முகத்தில் மட்டுமே. கண்ணிருந்தால் மட்டும் போதாது- என்பதைக் கூறும் திருக்குறள் ஒன்றும் உள்ளது. வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் மாணவர்கள் பயத்துடன், அச்சத்துடன் வாழ்ந்த யுகம் ஒன்றிருந்தது. அன்று இந்த மக்களின் உரிமை இழக்கப்பட்டிருந்தது. அவர்கள் துயருற்றனர். வீதியில் பயணிக்கும் போது எத்தனை சோதனைகள்? பாதைகளிலும் பஸ்களிலும் கூட சோதனை அப்போது எனக்கு பலர் தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்வர்.
சந்தேகத்தோடு அனைவரையும் பார்த்த யுகம். தமிழர் என்றால் மேலும் சந்தேகம் வலுக்கும். அவர்கள் அதிக சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சாப்பாட்டுப் பார்சலில் கூட குண்டுகள் இருக்கலாம் என சோதனையிடுபவர்கள் பிரித்துப் பார்த்த காலம் அது. பயம் காரணமாக வீடொன்றைப் கூலிக்கு பெற முடியாத காலம் அது. எனினும் பயமுறுத்தி வீடு வாங்கிய சந்தர்ப்பங்களும் உள்ளன. வடக்கிற்கோ தெற்கிற்கோ சுதந்திரமாக எவரும் செல்ல முடியாதநிலை. பாடசாலைக்கும் பல்கலைக்கும் போகும் மாணவர்கள் யுத்தத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டனர். இதிலிருந்து தம்மைப் பாதுகாக்க பணம் உள்ளவர்கள் வெளிநாடு சென்றுவிட்டனர்.
அந்த மோசமான யுகத்துக்கு நாம் முற்றுப் புள்ளி வைத்துள்ளோம். இப்போது மாணவர்கள் பயம் சந்தேகமின்றி கல்வியில் தம்மை ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். எம்மைத் தூற்றுகின்ற சில நாடுகள் சில சக்திகள் இன்னும் இந்த நாட்டில் மனித உரிமை மீறப்படுவதாக பிரசாரம் செய்கின்றன. இங்குள்ள சிலரும் இவ்வாறு கூறுகின்றனர். 'ஆடு நனைகின்றதென்று ஓநாய் அழுததாம்' அது போன்று தான் ஐரோப்பிய நாடுகளும் இங்கிருந்து சென்று வெளிநாடுகளில் வாழ்பவர்களும் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இதை உணர வேண்டும்.
இராமநாதன் கல்லூரி நாட்டிலுள்ள சிறந்த மகளிர் கல்லூரிகளில் ஒன்று. சேர். பொன். இராமநாதன் சிறந்த தலைவர். அவர் யாழ்ப்பாணத்தில் பிறந்து கொழும்பில் படித்தவர். இந்தியாவில் கற்றுத் திரும்பி சட்டத்தரணியாக கொழும்பில் பணிபுரிந்தவர். அவர் ஒருபோதும் இந்தியாவையோ அல்லது வேறு நாட்டையோ தமது தாய் நாடு என்று கூறவில்லை. இனத்துக்காக சமயத்துக்காக சேவைசெய்ய அதை அவர் தடையாக நினைக்கவில்லை. அவர்தான் வெசாக் போயாவை விடுமுறை தினமாக்க முன்னின்று நடவடிக்கை எடுத்தவர்.
1915 ல் ஏகாதிபத்தியவாதிகள் இலங்கையில் சிங்களவர்களைப் பழிவாங்குகையில் அதற்கு எதிராக போராடியவர் அவர். அன்று அரசியலமைப்புச் சபையில் இருந்து அர்ப்பணிப்புடன் உழைத்தவர் சேர் பொன். இராமநாதனே. அவர் நாட்டுக்காக மக்களுக்காக தம்மை அர்ப்பணித்தவர். அவர் இனம், மதம், குலம் 1}ளூரி|(சி ஒருபோதும் பார்த்ததில்லை.
நாட்டுக்கும் மக்களுக்கும் கௌரவம் தேடித்தந்தவர். மேல் மாகாணத்தில் பல சிங்களத் தலைவர்கள் மத்தியில் அதிக வாக்கு பெற்று அரசியலமைப்புச் சபைக்குத் தெரிவானவர். இது அவர் நாட்டுக்காக அர்ப்பணித்தமைக்குக் கிடைத்த பலன். அவர் தமிழரா சிங்களவரா என பார்க்காது மக்கள் வாக்களித்தனர். அத்தகைய தலைவரின் பெயரிலேயே இந்தக் கல்லூரி உள்ளது. அனைவரும் அவர் போல் சிந்திக்க வேண்டும்.
நீங்கள் பிறந்த நாடே வெற்றியின் மண். அதை அழிக்க, அசுத்தப்படுத்த, அதைக் குறைத்து மதிப்பிட, நாட்டை சீரழிப்பது போன்றவற்றிற்கு இடமளிக்க வேண்டாம். என்பதையே நான் எதிர்கால சந்ததியிடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். இந்த நாடு முழுவதும் உங்கள் நாடு. இந்த நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்போர் நீங்களே. பல்கலையிலும் மருத்துவக் கல்லூரியிலும் அவர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றனர்.
நாம் ஒரு தாயின் பிள்ளைகள், முழு நாடும் உங்களின் உரிமையாகும். ஒருபோதும் செய்நன்றி மறக்கவேண்டாம். இந்து சமயம் புராதன சமயம். அது சிறந்த கலாசார பாரம்பரியத்தைக் கொண்டது. அதைப் பாதுகாக்க வேண்டும். கல்வியே களவாட முடியாத சொத்து'. கற்று தேசிய, சர்வதேச ரீதியில் நீங்கள் முன்னேற வேண்டும் என்பதே எமது விருப்பம். தாய்நாட்டை ஒருபோதும் மறக்க வேண்டாம். எதிர்காலம் உங்களுடையது. தேசிய சர்வதேச ரீதியில் நீங்கள் நற்பெயர் பெற வேண்டும் என்பதே எனது ஆசை.
இங்குள்ள உண்மை நிலைமை அறியாதவர்களே வெளிநாடுகளில் இருந்து தவறான பிரசாரங்களை மேற்கொள்ளுகின்றனர். அவர்கள் இங்குள்ள நிலையை அறிய வில்லை. அவர்கள் இங்கு வந்தவர்களும் இல்லை. வாழ்ந்தவர்களும் இல்லை. உண்மை நிலையை அவர்கள் இங்கு வந்து பார்க்கட்டும்.
நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள். ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற ரீதியில் உங்கள் முன்§ன்றறத்திற்காக நாம் தொடர்ந்தும் மென்மேலும் உதவுவோம். உங்களுக்கு வளமான எதிர்காலத்திற்காக வாழ்த்துகிறேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரி வித்தார்.
0 comments :
Post a Comment