Wednesday, January 22, 2014

தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் - மாலைத்தீவு ஜனாதிபதி!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற பேச்சு வார்த்தை இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தையின் போது தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் தற்போதைய பொருளாதார அபிவிருத்தி, சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மை போன்ற மக்களால் உணரத்தக்க வெற்றிக்கு, மாலைத்தீவு மக்கள் உயர்ந்த மதிப்பளிப்பதாக அப்துல்லா யாமீன் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சமாதானம் மற்றும் சுபீட்சம் நிலவுகின்றமை மாலைத்தீவிற்கே நன்மையளிப்பதாக அமையும் என்றும் அந்தநாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற மாலைத்தீவின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றமை மற்றும் அமைதியான அரசியல் பரிணாம மாற்றத்தை முன்னிட்டு மாலைத்தீவு ஜனாதிபதியிடம் தமது மகிழ்ச்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் அப்துல்லா யாமீனின் திடமான வழிகாட்டலின் கீழ், மாலைத்தீவு மக்களுக்கு சுபீ ட்சம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துகொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மாலைதீவு ஜனாதிபதி அங்கு கருத்து தெரிவிக்கையில், மாலைதீவு மக்களுக்கு இலங்கை தமது இரண்டாவது வீடாக உணர முடிகின்றதாக தெரிவித்தார். தற்போது 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாலைதீவு பிரஜைகள், இலங்கையில் வசித்து வருகின்றனர். இலங்கை எந்த சந்தர்ப்பத்திலும், ஒரு சகோதரனாகவும், நண்பனாகவும், செயற்பட்டு வருவதை, ஜனாதிபதி யாமின் பாராட்டி பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் பின்னர், இரண்டு தரப்பினருக்கும் பயிற்சி மற்றும் இளைஞர் மேம்பாடு, விளையாட்டு மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான குற்றங்களை தடுத்தல் தொடர்பான 3 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத் திடப்பட்டது.

அமைச்சர் டளஸ் அழகப்பெரும, மாலைதீவு வெளியுறவு அமைச்சர் துன்யா மைமூனுக்கிடையெ தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் முன்னேற்றம் குறிஜத்து, ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. விளையாட்டுத்துறையில் இருதரப்பு ஒருங்கிணைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் மாலைதீவு ஜனாதிபதி செயலகத்தின் அமைச்சர் மொஹமட் ஹூஸைன் சரீப் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன், மாலைதீவு பொலிஸ் ஆணையாளர் ஹூஸைட் வாஹிட் ஆகியோர், குற்றங்களை ஒழிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். அமைச்சர்கள் பலரும், இதில் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து இடம்பெற்ற கைச்சாத்திடும் நிகழ்வுகளை அடுத்து, மாலைதீவு ஜனாதிபதி, ஜனாதிபதி செயலகத்தில் உள்ள நினைவு புத்தகத்தில் கையொப்பமிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com