யார் என்ன சொன்னாலும் வடக்கு மக்களின் சுபீட்சத்திற்காக மென்மேலும் உதவ தயாராகவுள்ளளேன் - மஹிந்த!
"எந்த இனமும் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்த முடியாது"
யார் என்ன சொன்னாலும் வடக்கு மக்களின் சுபீட்சத்திற்காக மென்மேலும் உதவ தயாராகவுள்ளளேன் எனவும், எந்த இனமும் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்த முடி யாது. அதற்கு ஒரு போதும் நாம் இடமளிக்கப்போவ தில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும் அடிக்கொன்றாக இருந்த படை முகாம்கள் நீக்கப்பட்டுள்ளதுடன் வடக்கில் 60,000 மாக இருந்த படையினரை 12,000 மாகக் குறைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
யாழ். தெல்லிப்பளையில் 300 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கான கட்டிடங்களை ஜனாதிபதி நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, நாம் 30 வருட கொடூர யுகத்தைக் கடந்து சமாதானம், மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய நாட்டைக் கட்டி யெழுப்பியுள்ள யுகத்தில் இது போன்ற செயற்பாடுகளுக்காக நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.
தேவேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரை நடைபவனியாக வந்து அதன் போது சேர்க்கப்பட்ட பணத்திலேயே 300 மில்லியன் ரூபா செலவில் தெல்லிப்பளை புற்றுநோய் ஆஸ்பத்திரி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அனைவரதும் ஒத்துழைப்பு களுடன் இந்த நீண்ட நடைபவனி பருத்தித்துறை வரை வருவதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்தமையையிட்டு மகிழ்ச்சியுற முடிகிறது.
யார் என்ன சொன்னாலும் இது எமது மக்களுக்குக் கிடைத்த சிறந்த நன்மை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். வெளிநாட்டிலுள்ளவர்கள் என்ன கூறினாலும் இந்த நாட்டு மக்கள் இந்த உண்மையை யதார்த்தத்தை உணர்ந்து கொண்டுள்ளனர்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் பிரதம நீதியரசராக இருந்து எமது கௌரவத்தைப் பெற்றுக் கொண்டவராவர். அவர் மிக விரைவாக அரசியலுக்குள் பிரவேசித்தமை தொடர்பிலும் அனைத்து மேடைகளையும் தமக்கு சாதகமாக உபயோகப்படுத்திக் கொள்ளும் எம் போன்றவர்களுடன் இணைந்து கொள்வதை எண்ணி நான் சந்தோஷப்படுவதா கவலையடைவதா என்பதைக் கூற முடியாதுள்ளது.
எவ்வாறாயினும் எம் அனைவரினதும் எதிர்பார்ப்பு இந்த நாட்டில் அனைத்து மக்களும் சமாதானம் மகிழ்ச்சியுடன் வாழ்வதே. முதலமைச்சர் விக்னேஸ்வரன் பல விடயங்களை முன்வைத்தார். அவருக்கு நான் கூற விரும்புவது:-இந்த நாட்டில் ஒரு யுகம் இருந்தது. அந்த யுகத்தில் அவர் இங்கு வந்தாரா என்பது எனக்குத் தெரியாது.
இராணுவம் முழு நாட்டிலும் பாதுகாப்பிற்காக இருக்க வேண்டும். இன்று நான் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் தலையங் கத்தைப் பார்த்த போது இராணுவத்தினரை விலக்கிக் கொள்வதால் நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன.
இது தொடர்பில் கவனம் செலுத்துவது முக்கியம்' என அதில் கூறப்பட்டுள்ளது.எந்த இனமும் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்த முடியாது. அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதுமில்லை.நாம் இந்த நாட்டில் பிறந்தவர்கள், எம் அனைவரது உடலில் ஒரே நிறமாக சிவப்பு இரத்தமே ஓடுகிறது.
எமக்குள்ள உணர்வும் வேதனையும் அனைவருக்குமே உள்ளது.புற்று நோய் என்பதும் ஒரு இனத்துக்கோ அல்லது குழுவுக்கோ வரும் ஒன்றல்ல. அதனால் சகல மக்களும் துன்பத்தை அனுபவிக்கின்றனர். அதனால் இத்தகைய அனைத்து மக்களுக்கும் சமமாக சிகிச்சையளிப்பதற்கு சமமாகக் கவனிப்பதற்கு நாம் எப்போதும் கடமைப்பட்டுள்ளோம்.
அவற்றை செயற்படுத்த எப்போதும் நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்பதையும் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.கொடூர யுத்தம் முடிவடைந்து குறுகிய 4 வருட காலத்திற்குள் 14 மாதங்களே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண் பதற்காக நேரம் கொடுக்க முடிந்தது.
ஏனைய காலங்களில் நாம் கண்ணிவெடிகளை அகற்றவும் அடிப்படைத் தேவை களை வழங்கவும் மூன்று இலட்சம் மக்களை மீளக் குடியேற்றவும் மின்சாரம் உட்பட தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க நீரைப் பெற்றுக் கொடுக்க வடக்கிற்கு மீள ரயிலைக் கொண்டுவர என பல செயற்பாடுகளை மேற்கொண் டுள்ளோம்.
இவை குறுகிய காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேவேளை 14,000 பேருக்குப் புனர்வாழ்வளித்து அவர்களை விடுதலை செய்துள்ளோம்.மாகாண சபை தேர்தல் உள்ளூராட்சி சபைத் தேர்தல், பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என தேர்தல்கள் நடத்தி அவற்றின் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகளை முழு நாட்டுக்கும் பெற்றுக் கொடுத்துள்ளோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment