Friday, January 10, 2014

வலி.கிழக்கு பிரதேச சபை வரவு – செலவுத் திட்டம் மீண்டும் தோல்வி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு கீழுள்ள வலி.கிழக்கு பிரதேச சபையின் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்டம் இரண்டாவது தடவையாக தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமார் சபையில் இன்று(10.01.2013) சமர்ப்பிக்கப்பட்ட போதும், 3 மேலதிக வாக்குகளால் மீண்டும் தோல்வியடைந்தது.


இந்நிலையில், முதலாவது முறை கொண்டுவரப்பட்ட வரவு – செலவுத்திட்டத்தினை மாற்றங்கள் எதுவும் செய்யாமல் அப்படியே கொண்டு வந்தமை, மற்றும் சபை உறுப்பினர்களின் ஆலோசனைகள் பெறப்படவில்லையென சபை உறுப்பினர்களுடையே வாதவிவாதம் இடம்பெற்றதுடன் 21 உறுப்பினர்களை கொண்ட வலி.கிழக்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 16 பேரும், ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஐவரும் இருக்கின்றனர்.

தொடர்ந்து வரவு – செலவுத்திட்டம் வாக்கெடுக்குப்புக்கு விடப்பட்டபோது, 21 உறுப்பினர்களில் 12 உறுப்பினர்கள் எதிராகவும், 9 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களிக்க வரவு – செலவுத்திட்டம் 3 வாக்குகளால் தோல்வியடைந்தது. 

ஏற்கனவே கடந்த 2013 நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வரவு – செலவுத்திட்டத்தில் 10 உறுப்பினர்கள் எதிராகவும், 9 உறுப்பினர்களுக்கு ஆதரவாகவும் வாக்களிக்க ஒரு வாக்குகளால் தோல்வியடைந்திருந்தது. 

உள்ளுராட்சிச் சட்டங்களுக்கு அமைவாக வரவு – செலவுத்திட்டம் டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி முன்னர் சமர்ப்பிக்கப்படவேண்டும். இந்நிலையில், தவிசாளரினால் வரவு – செலவுத்திட்டம் 9 உறுப்பினர்கள் சபையிலிருக்க அவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வரவு – செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதாக கடந்த 27 ஆம் திகதி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இருந்தும், இந்தக் கூட்டத்தொடரிற்கு தங்களை அழைக்கவில்லையெனவும், தனியான இடமொன்றில் இக்கூட்டம் நடைபெற்றுள்ளதாகவும் ஆகவே இது பற்றி விசாரணைகளை நடத்த வேண்டுமென மிகுதி உறுப்பினர்கள் (12) முதலமைச்சரினைக் கேட்டுக்கொண்டனர்.

தொடர்ந்து முதலமைச்சர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளருக்கு உத்தரவிட்டார். அதற்கமைய நேற்று (09) வலி.கிழக்குப் பிரதேச சபைக்கு விஜயம் மேற்கொண்ட பிராந்தி உள்ளுராட்சி உதவி ஆணையாளர்கள், 27 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்ட வரவு – செலவுத்திட்டம் ஒரு தனியார் வீட்டில் வைத்து நிறைவேற்றப்பட்டமையும் அது முறையாக அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

தொடர்ந்து இவ்விடயம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், 'மறுநாளே மேற்படி வரவு – செலவுத்திட்டத்தினை மீண்டும் வாக்கெடுக்குப்பிற்கு விடும்படி' முதலமைச்சர் பிராந்திய உதவி ஆணையாளருக்குத் தெரிவித்ததுடன், வரவு – செலவுத்திட்ட வாக்கெடுப்பில் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளரையும் கலந்துகொண்டு கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் பணித்தார்.

அதற்கமைய இன்று (10.01.2013) வரவு – செலவுத்திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடந்துடன் அது தோல்வியில் முடிவடைந்துள்ளதுடன் இதனை கண்காணித்துக் கொண்டிருந்த பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் வலி.கிழக்கு பிரதேச சபையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த தீர்மானங்கள் வடமாகாண முதலமைச்சரினால் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com