Tuesday, January 28, 2014

வல்வெட்டித்துறை நகரசபைக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார் க.சிவாஜிலிங்கம்!

வல்வெட்டித்துறை நகரசபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித திருத்தங்களையோ, ஆலோசனைகளையோ, அல்லது மாற்றங்களையோ தெரிவிக்காத நிலையில், தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளரும், உறுப்பினருமான எஸ்.எக்ஸ்.குலநாயகமும், அவரது ஐந்து ஆதரவாளர்களும் இணைந்து தோற்கடித்ததைத் தொடர்ந்து, வல்வெட்டித்துறை மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. அவர்களது நடவடிக்கைகளுக்கு அதிருப்தியைக் காட்டும் வகையில், இரண்டாவது தடவையாகவும் 27.12.2014 அன்று மீண்டும் அதே வரவு செலவுத் திட்டத்தையே சபையில் சமர்ப்பித்த பொழுது, பல நூற்றுக்கணக்கான மக்களின் எதிர்ப்பினால், நகரசபையின் எதிரணியினரின் பிரசன்னமின்றி வரவு செலவுத் திட்டம் போதிய நிறைவெண்ணுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது தெரிந்ததே.

அதனைத் தொடர்ந்து, எஸ்.எக்ஸ்.குலநாயகம் மனித உரிமைகள் ஆணைக்குழு, வடமாகாண முதலமைச்சர், வடமாகாண ஆளுநர்,உள்ளுராட்சி ஆணையாளர், உள்ளுராட்சி உதவி ஆணையாளர், தேர்தல் ஆணையாளர், தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு முறைப்பாடுகள் செய்து, மக்களின் ஆதரவு பெற்ற பெரும்பான்மை உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை இரத்துச் செய்ய வேண்டுமென்று கோரியிருந்தார். 2011 ஆம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தல் முடிவடைந்ததும் க.சிவாஜிலிங்கத்தையும்,எக்ஸ்.குலநாயகத்தையும் தலைவர்களாகவும், ஏனைய வென்றவர்கள் தோற்றவர்களை உப தலைவர்களாகவும் சுழற்சி முறையில் நியமிக்கவேண்டும் என்றும், அல்லாவிட்டால் ந.அனந்தராஜாவின் நிர்வாகத்தை முடக்கப்போவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.மாவை சோ.சேனாதிராசாவுக்கு அவர்கள் இருவரும் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, வல்வெட்டித்துறை நகரசபைக் கூட்டங்களில் தொடர்ச்சியாகக் குழப்பத்தை ஏற்படுத்தி வந்தனர்.

அதன் இறுதி முயற்சியாக வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் க.சிவாஜிலிங்கத்தின் தலைமையிலான தமிழ்தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் மூலம் வழக்குத் தொடருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக, வடமாகாண சபையின் உறுப்பினரான க.சிவாஜிலிங்கம் 25.01.2014 அன்று இணையத் தளங்களுக்கு அறிக்கை விடுத்துள்ளார்.

(அவரால் இணையங்களுக்கு விடுக்கப்பட்ட செய்திக் குறிப்பு கீழே தரப்பட்டுளளது)


வல்வெட்டித்துறை நகரசபை தலைவருக்கு எதிராக வழக்கு!!

வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க கூட்டமைப்பின் சக உறுப்பினர்கள் தயாராகியுள்ளனர். தன்னிச்சையான அவரது செயற்பாடுகளிற்கு எதிராகவே அவரது கட்சி சார்ந்த ஏனைய உறுப்பினர்கள் ஜவரும் இணைந்து வழக்கு தாக்கல் செய்ய முற்பட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நகரசபையின் உறுப்பினராக இருந்தவருமான சிவாஜிலிங்கம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அவ்வகையினில் யாழ்.மேல்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படலாமெனவும் எதிர்பார்க் கப்படுகின்றது. அதற்கான ஏற்பாடுகளில் கடந்த சில தினங்களாக சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் முற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில் தற்போதைய வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் அனந்தராஜிற்கு எதிராக அவரது கட்சி சார்ந்த 5 உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க முற்பட்டிருந்தனர். இந்நிலையில் அதனை முறியடிக்க தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு அனந்தராஜ் போராட்டத்தினை நடத்திய நிலையில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள சக உறுப்பினர்கள் ஜவரும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தனர். இதையடுத்தே தற்போது வழக்கு தாக்கல் செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com