இந்திய விமான போக்குவரத்து சேவையின் தரம் குறைவு: அமெரிக்கா அறிக்கை
அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து ஆணையம், இந்திய விமான போக்குவரத்து சேவையின் தரத்தை குறைத்துள்ளது. இதன்மூலம், இந்திய விமான நிறுவனங்கள் இனி அமெரிக்காவுக்கான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது.
மேலும், தற்போதுள்ள விமானங்களும் கூடுதல் சோதனைகளை சந்திக்க நேரிடும் என்று செய்தி வெளியாகி உள்ளது. பாதுகாப்பு தரவரிசையில் இந்தியா முதல் பிரிவிலிருந்து இரண்டாம் பிரிவிற்கு தரமிறக்கப்பட்டுள்ளது என இந்திய விமான போக்குவரத்து ஆணைய டைரக்டர் ஜெனரல் பிரபாத் குமார் தெரிவித்தார்.
மேலும் ஆசிய பசிபிக் விமான போக்குவரத்து ஆணையத்தை சேர்ந்த கபில் கவுல் கூறுகையில், “இது நம்நாட்டிற்கு மிகவும் சங்கடமான சூழ்நிலையாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் சிறப்பாக செயலாற்றவில்லை என்பதே உண்மை. கடந்த 2009ஆம் ஆண்டு முதல் முறையாக இதேபோன்று தரமிறக்கப்பட்டது. ஆனால் இதை எச்சரிக்கையாக கொண்டு நாம் சிறப்பாக செயல்பட்டு இதிலிருந்து மீண்டோம். தற்போதைய இந்த நடவடிக்கை இந்திய விமான நிறுவனங்களின் நடப்பு மற்றும் எதிர்கால சேவைகளை பாதிக்கும்” என்றார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு தரம் குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, இன்று மும்பை பங்குசந்தையில் ஜெட் ஏர்வேஸ் பங்குகளின் மதிப்பு 4 சதவீதம் சரிந்து ரூ.236.80 ஆக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment