பிரபாகரனின் முடியுடன் கூட ஜனாதிபதியை ஒப்பிட முடியாது - மேதானந்த தேரர்
30 வருடகால சாபத்தை முடிவுக்கு கொண்டு வந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பிரபாகரனின் முடிக்கு ஒப்பானவர் அல்ல எனக் கூறுவது பாரிய குற்றம் என நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலில் உள்ள ஒரு முடிக்கும் ஒப்பிட முடியாதவர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரபாகரன் என்பவர் மிகவும் ஆபத்தான பயங்கரவாத அமைப்பின் தலைவர். அப்படியான ஒருவரின் முடியுடன் கூட ஜனாதிபதியை ஒப்பிட முடியாது என பொன்சேகா கூறியுள்ளதன் மூலம் அவர் தற்பொழுது எந்த வழியில் பயணிக்க தொடங்கியுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.
பிரபாகரன் மோட்டார் குண்டுகளை வீசி தாக்கி, வெடி குண்டுகளை வெடிக்க செய்து, தற்கொலை குண்டுதாரியை கொழும்புக்கு அனுப்பி பொன்சேகா மீது தாக்குதல் நடத்திய போது பொன்சேகாவுக்கு பிரபாகரனின் உடலில் உள்ள முடியின் மதிப்பு தெரியவில்லையா என நான் கேள்வி எழுப்புகிறேன்.
வாய் இருக்கின்றது என்பதால் வீணாக வார்த்தைகளை உதிராது ஒழுக்கமான அரசியலில் ஈடுபடுமாறு பொன்சேகாவிடம் கேட்டுக்கொள்வதாக மேதானந்த தேரர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment