''உதவி கோரி நாங்கள் நீட்டும் கரங்களில் சர்வதேச சமூகம் துப்பிவிடக்கூடாது'' - டலஸ் அழகப்பெரும
பிரிவினைவாதத்தை போஷிக்கும் செயற்பாடுகள் இலங்கைக்கு வெளியில் இருக்கும்வரை நாங்கள் ஜெனிவா செல்லவேண்டியேற்படும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் போருக்குப் பின்னரான எமது நாட்டைக் கட்டியெழுப்பவும் ஒற்றுமையை பலப்படுத்தவும் மேற்கு நாடுகள் எங்களுக்கு உதவவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
மாறாக உதவி கோரி நாங்கள் நீட்டும் கரங்களில் சர்வதேச சமூகம் துப்பிவிடக்கூடாது. ஜெனிவா விவகாரத்தைப் பொறுத்தவரை சர்வதேச சமூகத்துக்கு எமது அமைச்சர்கள் தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டுவருகின்றனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது
ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலக்கங்களை வைத்து எதனையும் தீர்மானிக்க முடியாது. பிரேரணைகள் வந்த போது எமக்கான ஆதரவு இருந்துள்ளதை கண்டுள்ளோம்.
யுத்தம் முடிந்துவிட்டது. தற்போது நாட்டில் சமாதானம் ஏற்பட்டுள்ளதுடன் அபிவிருத்தியும் ஏற்பட்டுவருகின்றது. கடந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற்றபோது கொழும்பு எவ்வாறு இருந்தது என்று அனைவருக்கும் தெரியும்.
குண்டுகள் வெடிக்கும் இடமாக கொழும்பு காணப்பட்டது. முல்லைத்தீவு காட்டுக்குள் இருந்த பிரபாகரன் கொழும்பில் அரசியல் தலைவர்களை சிறைப்படுத்தியிருந்ததை மறக்க முடியாது. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது.
யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. இந்நிலையில் பல முன்னேற்றங்களை காட்டியுள்ளோம். ஆனால் எங்களினால் மெஜிக் காட்ட முடியாது. போருக்குப் பின்னரான எமது நாட்டைக் கட்டியெழுப்பவும் ஒற்றுமையை பலப்படுத்தவும் மேற்கு நாடுகள் எங்களுக்கு உதவவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். எமது நாட்டை கட்டியெழுப்ப உதவுங்கள்.
மாறாக உதவி கோரி நாங்கள் நீட்டும் கரங்களில் சர்வதேச சமூகம் துப்பிவிடக்கூடாது. ஜெனிவா விவகாரத்தைப் பொறுத்தவரை சர்வதேச சமூகத்துக்கு எமது அமைச்சர்கள் தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டுவருகின்றனர். நாட்டில் எற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்திவருகின்றோம்.
பிரிவினைவாதத்தை போஷிக்கும் செயற்பாடுகள் இலங்கைக்கு வெளியில் இருக்கும்வரை நாங்கள் ஜெனிவா செல்லவேண்டியேற்படும் என்பது எங்களுக்குத் தெரியும் என்றார்.
0 comments :
Post a Comment