தீவிரவாதிகளை ஒழித்து கட்டுவேன் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வோல்காகிரேட் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் கடந்த கிழமை தற் கொலைப்படை பெண் தீவிரவாதி பயங்கர தாக்குதல் நடத்தினார். இதில் 18 பேர் உடல் சிதறி பலியானார்கள்.
இந்த சோகம் மறைவதற்கு முன்பே, மறுநாள் அதே நகரில் பஸ்சில் குண்டு வெடித்தது. இதில் 16 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். வோல்காகிரேட் அருகே உள்ள சோச்சி நகரில் வரும் பெப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்த தாக்குதல்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குளிர்கால ஒலிம்பிக் போட்டியை சீர்குலைக்க நடந்த சதியாக இருக்கலாம் என்றும் அச்சம் பரவியுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பிரதமர் டிமிட்ரி மெட்வதேவ் ஆகியோர் இதுதொடர்பாக அவசர ஆலோசனை நடத்தினர். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் புடின், வோல்காகிரேடில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு, தீவிரவாதிகளின் காட்டுமிராண்டிதனமான செயல். அதை ஒருபோதும் மன்னிக்க முடியாது. தீவிரவாதிகளுக்கு எதிராக துணிச்சலான, வலுவான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர்கள் அடியோடு ஒழித்து கட்டப்படுவார்கள் என தெரிவித்தார்.
ரஷ்யாவின் வடக்கு கசாகஸ் பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. அவர்கள், தனிநாடு கோரி தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment