Thursday, January 2, 2014

தெனகிழக்குப் பல்கலை அரபுமொழிபீடத்தின் 1வது சர்வதேச ஆய்வரங்கு!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழி பீடத்தின் முதலாவது சர்வதேச ஆய்வரங்கு “இஸ்லாமிய அறிவியலையும் மானுட, சமூக அறிவியலையும் ஒன்றிணைப்பதை நோக்கி” எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 05.01.2014 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஒலுவில் வளாகத்தில் அமைந்துள்ள இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தில் நடைபெறவுள்ளது. இவ்வாய்வரங்குக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்கள் பிரதம அதிதியாகவும் , இலங்கை ஜாமியாஹ் நளீமியாஹ் கல்லூரியின் பணிப்பாளரும் , ஒய்வு பெற்ற சிரேஷ்ட அரபு மொழி இஸ்லாமிய கற்கைகள் விரிவுரையாளரும், இலங்கையின் மிக முக்கிய கல்வி ஆளுமைகளுள் ஒருவருமான கலாநிதி. எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்புரையாற்றவுள்ளார்.

அண்மைக்காலமாக ஆய்வு முயற்சிகளில் அதிகளவில் ஈடுபட்டு வரும் தென்கிழக்கு பல்கலைக்கழகமானது அறிவியல் துறையின் பெருவளர்ச்சிக்கு இன்றியமையாத பங்களிப்பை வழங்கிவருவது கண்கூடு. அந்தவகையில் இலங்கையின் ஒரே ஒரு பீடமாக இயங்கி வரும் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தின் முதலாவது சர்வதேச ஆய்வரங்கு இப்பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு சாதனையை பறைசாற்றி நிற்கிறது. இவ்வாய்வரங்கின் தலைவராக இப்பீடத்தின் பீடாதிபதி அஷ்ஷெய்க் ஏ.பி.எம்.அலியார் அவர்களும், ஒருங்கிணைப்பாளராக அரபு மொழி பீட தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச்.எம். முனாஸ் அவர்களும், விரிவுரையாளர் ஏ.எம்.ராசிக் அவர்களும், இணைச்செயலாளர்களாக விரிவுரையாளர்களான எப்.எச்.ஏ.ஷிப்லி மற்றும் எச்.எம்.ஏ.ஹில்மி ஆகியோரும் செயற்படுகின்றனர்.

இலங்கை, இந்தியா, மலேசியா, மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச்சேர்ந்த ஆய்வாளர்களினால் ஐம்பத்து ஆறு ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. மொழி, இலக்கியம்,மொழிபெயர்ப்பு, இஸ்லாமிய நாகரீகம், எண்ணக்கருக்கள், இஸ்லாமிய வங்கியியலும் நிதியும் மற்றும் முஸ்லிம் சமூக விடயங்கள் ஆகிய உப தலைப்பிக்களில் அனைத்து ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இவ்வாய்வரங்கானது இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி தொடர்பான பல புதிய கதவுகளை திறக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று இவ்வாய்வுக்கட்டுரைகள் அனைத்தும் அடங்கிய “Proceedings” புத்தகமும் அன்றைய தினம் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூகத்தின் வளர்ச்சிக்கும், பிரதேச அபிவிருத்திக்கும் தன்னாலான முழுப்பங்களிப்பினையும் வழங்கிவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடமும் இதுபோன்ற பல்வேறுபட்ட ஆய்வு முயற்சிகளை இனிவரும் காலங்களிலும் முன்னெடுத்துச்செல்ல அவாக்கொண்டுள்ளது. இவ்வாய்வரங்கினைத்தொடர்ந்து இளம்பட்டதாரிகளுக்கான ஆய்வரங்கினை (Undergraduate Colloquium) இப்பீடம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பெப்ரவரி,மார்ச் மாத காலப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக உப வேந்தர், பதிவாளர், நிதியாளர், களை கலாசார பீட பீடாதிபதி ஆகியோரின் ஒத்துழைப்புடனும் அரபு மொழித்துறை தலைவர் எம்.எச்.ஏ.முனாஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக முதலாவது சர்வேதச ஆய்வரங்கின் இணைச்செயலாளர் எப்.எச்.ஏ.ஷிப்லி தெரிவித்தார்.

ஆய்வரங்கு குழு
முதலாவது சர்வேதச ஆய்வரங்கு
இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழி பீடம்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்
ஒலுவில்.

No comments:

Post a Comment