Tuesday, December 31, 2013

கொழும்பு மாநகரமே கதிரியக்க தாக்கத்தில் மூழ்க வேண்டிய ஆபத்து மயிரிழையில் தவிர்க்கப்பட்டது

கொழும்பு துறைமுகத்தில் அவதானத்துடன் இருந்த சுங்க அதிகாரிகள் கதிரியக்கம் படிந்திருந்த ஒரு கொள்கலனை சரியான வேளையில் கண்டுபிடித்ததனால் கொழும்பு மாநக ரமே கதிரியக்க தாக்கத்தில் மூழ்க வேண்டிய ஆபத்து தவிர்க்கப்பட்டது. ஜப்பானின் யொக்கோ ஹோமா துறைமு கத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு சமீபத்தில் கொள்கலன்களை ஏற்றிவந்த கப்பலிலேயே இது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்தக் கப்பலில் வாகனங்களின் உதிரிப் பாகங்கள் பெருமளவில் கொண்டு வரப்பட்டது. இதனை அவதானித்த சுங்க அதிகாரிகள் சிசியம் 137 (Caesium 137) என்ற கதிரியக்க சக்தியைக் கொண்ட பொருட்கள் இருப்பதை அவதானித்தார்கள்.

இது வெளியில் இருந்தால் மனிதர்களின் உடலில் தீப்புண்கள் ஏற்படுவதுடன், மரணத்தை ஏற்படுத்தக்கூடிய பாரதூரமான கதிரியக்க தாக்கமும் ஏற்படும் என்று அறிவிக்கப்படுகிறது. டிசம்பர் 11ம் திகதியன்று இந்த கொள்கலன் திறக்கப்பட்ட போது கொழும்புத் துறைமுகத்தில் உள்ள கதிரியக்கத்தை கண்டுபிடிக்கும் கருவி ஆபத்தை அறிவுறுத்தும் மணி ஒலிக்க ஆரம்பித்தது. இதனால், சுங்க அதிகாரிகள் உடனடியாக அந்த கொள்கலனை மூடிவிட்டார்கள்.

துறைமுகத்தில் தன்னியக்க கருவிகள் கதிரியக்கம் இருப்பதை கண்டுபிடித்ததை அடுத்து நாம் அந்த கொள்கலனை ஒதுக்குப் புறமாக வைத்துவிட்டோம் என்று சுங்கத்திணைக்களத்தின் பேச்சாளரும், சட்டத்துறை பணிப்பாளருமான லெஸ்லி காமினி தெரிவித்தார். யக்கலையில் உள்ள ஒரு நிறுவனமே இந்த கொள்கலனை ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இறக்குமதி யாளர்கள் இந்த கொள்கலன்களில் வாகனங்களின் உதிரிப்பாகங்கள் மாத்திரமே இருப்பதாக அறிவித்தனர்.

இதனை இறக்குமதி செய்தவர்களுக்கு இந்த கொள்கலனில் கதிரியக்க சக்திவாய்ந்த பொருட்கள் இருப்பது தெரியாதிருந்தது என்றும் அவர் கூறினார். இதுகுறித்து ஜப்பானில் உள்ள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அது மீண்டும் ஜப்பானுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

இந்த சிசியம் 137 கதிரியக்கம் 1960களில் ஆயுதங்களை பரிசோதனை செய்து பார்த்த போது சுற்றாடலில் கலந்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. இதனால், மக்களும் நாளாந்த வாழ்க்கையில் இந்த கதிரியக்க தாக்கத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள். இந்த கதிரியக்கப் பொருள் பெருமளவில் இருந்தால் மரணம் உட்பட பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

கதிரியக்க சிகிச்சை முறையும் இதன் மூலமே மேற்கொள்ளப்படுகிறது. இந்த கதிரியக்கச் சக்தி சீல் வைக்கப்பட்ட கொள்கலன்களில் இருக்க வேண்டுமென்றும் அது பொதுமக்கள் இருக்கும் இடங்களில் வைக்கப்படலாகாதென்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கையும் செய்துள்ளார்கள்.

இவற்றை வேண்டுமென்றோ அல்லது தவறுதலாக திறந்தால் அந்த கதிரியக்கம் அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரையும் தாக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். இந்த கதிரியக்கச் சக்தி மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்தை கொண்டு ள்ளது. இதனைத் தவறுதலாக சுவாசித்தால் உடலில் உள்ள மென்மையான சவ்வுகளை பாதித்து, கதிரியக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப் படுகின்றது.

No comments:

Post a Comment