Wednesday, December 4, 2013

முஸ்லிம் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ள முஸ்லிம் தலைவர்கள் நாட்டில் தீவிரவாதத்தை பரப்பி வருகின்றனர். BBS

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார நேற்று கொழும்பில் இடம்பெற்ற அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதுடன் சிங்களவர் தமிழை கற்க வேண்டியதில்லை என்றும் மாறாக தமிழர் சிங்களத்தை கற்றுக்கொண்டால் போதும் என்றும் போதித்துள்ளார். மாநாட்டில் தொடர்ந்து பேசிய தேரர் இன்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் போன்ற கிறிஸ்தவ மதத் தலைவர்கள் அரச சார்பற்ற சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து இலங்கைக்குள் கிறிஸ்தவ தீவிரவாதத்தை பரப்ப ஆரம்பிக்கின்றனர் என்று சாடியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில் , பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு இலங்கையில் அடைக்கலம் கொடுக்கச் சொல்வதற்கு மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு உரிமையில்லை.

கிழக்கி்ல் இருக்கும் முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்து முஸ்லிம் தீவிரவாதத்தை நாட்டில் பரப்பி வருகின்றனர்.

இன்று கிழக்கில் பெரும்பாலான பகுதிகள், அவற்றின் அபிவிருத்திகள், குறிப்பாக முஸ்லிம் பள்ளிவாசல்கள் மத்திய கிழக்கு நாடுகளின் அனுசரணையுடன் புனர்நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கத்தின் உள்ளிருக்கும் அமைச்சர்கள் இன்று முஸ்லிம் நாடுகளுடனான உறவுகளை வைத்துள்ளனர். இலங்கையில் போதைப்பொருட்கள், கருக்கலைப்பு மாத்திரைகள் உருவாவதற்கும் சமூகம் சீரழிவதற்கும் அவையும் முக்கிய காரணமாகும்.

மேலைத்தேய கிறிஸ்தவர்களையோ முஸ்லிம்களையோ அல்லது புலம்பெயர் மக்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு இலங்கை அநாதை மடமோ, ஆசிரமமோ இல்லை. தீவிரவாதிகளுக்கும் கலாசாரத்தையும் நாட்டையும் சீரழிக்கும் கூட்டத்தினருக்கும் இலங்கையில் இடமில்லை.

இதனை இங்குள்ள அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டைக் காப்பாற்றும் யுகத்திலேயே இன்று நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். தொடர்ந்தும் நாட்டுக்காகவும் பெளத்த சிங்கள மக்களுக்காகவும் போராடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்மொழியை அரச கருமமொழியாக்க வேண்டிய அவசியம் இலங்கையில் தேவையில்லை. சிங்கள மக்கள் தமிழ் மொழியைப் படிக்காது தமிழர்கள் சிங்கள மொழியைப் படிக்க வேண்டும். பெளத்த நாட்டில் சிங்கள பெளத்த மதத்தவருக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

புலம்பெயர்ந்தவர்களையும் மத்திய கிழக்கு கிறிஸ்தவர்களையும் பாதுகாத்து அடைக்கலம் கொடுக்க இலங்கை அநாதை மடமல்ல.

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து நாட்டை சீரழிக்க நாம் விரும்பவில்லை எனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பெளத்தர்களுக்கு இருக்கும் சுதந்திரமும் உரிமைகளும் ஏனைய அனைவருக்கும் உள்ளன. இலங்கை மத வாதத்தில் ஊறிய நாடல்ல. ஆனால் இலங்கையில் பெளத்த மதமும் சிங்கள மொழியுமே அரச கரும மொழியாகவும், மதமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் மாற்றத்தினை ஏற்படுத்த நினைக்கக் கூடாது.

தமிழ் மொழியினை நாட்டின் பெரும்பான்மைச் சிங்களவர்கள் கற்றுக்கொள்வதனால் எவ்வித பயனுமில்லை. தமிழர்களே இலங்கையின் தேசிய மொழியை கற்றுக்கொண்டு நாட்டுக்கு ஏற்ற வகையில் மாறிக்கொள்ள வேண்டும்.

எந்தவொரு நாட்டுக்குச் சென்றாலும் அந்நாட்டின் பிரதான மொழியினை கற்றுக்கொண்டே செல்ல வேண்டும். இலங்கையும் அதைப் போன்றதே. எனவே மொழிக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

இன்று தமிழ் மொழியை அரச கரும மொழியாக்க சொல்பவர்கள் நாளை அரேபிய மொழியையும் தேசிய அரச கரும மொழியாகக் கொண்டுவரச் சொல்வார்கள். எனவே மொழியை வைத்து நாட்டை சீரழிப்பதை அனுமதிக்கக் கூடாது.

மொழியை வைத்து இலங்கைக்குள் பிரிவினையை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றனர். இன்று வடக்கை தமிழர்களின் பகுதியென விக்கினேஸ்வரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் குறிப்பிடுகின்றனர்.

வடக்கில் தமிழ் சிவில் சேவைகளையும் தமிழ் வீதிப் பலகைகளையும் உருவாக்க வேண்டும் என குறிப்பிடுகின்றனர்.

அதேபோன்று கிழக்கில் முஸ்லிம்களின் ராஜ்ஜியம் இடம்பெறுகின்றது. இவ்வாறு மத, மொழி பிரிவினைகளை பிரதானமாக வைத்தே நாட்டில் பிரிவினை வாதம் உருவாக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்தும் செயற்படுத்தாவிட்டால் இலங்கையில் சிங்கள, பெளத்தர்களுக்கென்று எவ்வித சான்றுகளும் இல்லாது போய்விடும். எனவே இரண்டாம் மொழியை தேசிய அரச கரும மொழியாக மாற்றுவதனால் மீண்டும் பிரிவினை யுத்தம் ஆரம்பிக்கும்.




No comments:

Post a Comment